தென்னிந்திய சினிமா

ஆஸ்கர் விருது தெரிவுப் பட்டியலில் பாகுபலி தோல்வியுற்றதில் கவலையில்லை: இயக்குநர் ராஜமவுலி

ஸ்கிரீனன்

ஆஸ்கர் விருது தெரிவுப் பட்டியலுக்கான போட்டியில் தோற்றுப்போனதில் எந்த கவலையும் இல்லை என்று 'பாகுபலி' இயக்குநர் ராஜமவுலி தெரிவித்திருக்கிறார்.

அமித் மசூர்கார் இயக்கியுள்ள 'நியூட்டன்' திரைப்படத்தில், ராஜ்குமார் ராவ், பங்கஜ் த்ரிபாதி, ரகுவீர் யாதவ் மற்றும் அஞ்சலி பாட்டீல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சட்டீஸ்கரின் மோதல் நிறைந்த காடுகளில் நேர்மையாகத் தேர்தல் நடத்த முயலும் தேர்தல் அதிகாரி நியூட்டன் குமாரின் போராட்டத்தைப் பற்றிப் பேசும் படம் 'நியூட்டன்'.

ஆஸ்கர் விருது பரிந்துரையில் 'நியூட்டன்' மற்றும் 'பாகுபலி' ஆகிய படங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியாக 'நியூட்டன்' பரிந்துரைக்கப்படுவதாக இந்திய அரசாங்கம் அறிவித்தது.

அப்போது 'பாகுபலி' ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படாதது குறித்து இயக்குநர் ராஜமவுலியிடம் கேட்ட போது, "இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது தெரிவுப் பட்டியலுக்கான போட்டியில் தோற்றுப்போனதில் எந்த கவலையும் இல்லை. நான் எப்போதும் விருதுகள் குறித்து யோசிப்பதில்லை. விருது எனது இலக்கல்ல.

முதலில் நான் தேர்வு செய்யும் கதை என்னை திருப்திப்படுத்த வேண்டும் பின்னர் அது பெரும்பாலான ரசிகர்களைச் சென்றடைகிறதா என்பதிலுமே என் கவனம் இருக்கும். ஒரு படத்துக்காக தங்கள் உழைப்பை செலவிடும் அனைவருக்குமே அப்படம் லாபகரமாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.

SCROLL FOR NEXT