கன்னட நடிகர் உபேந்திரா, ஸ்ரேயா நடிப்பில் பான் இந்தியா முறையில் உருவாகியுள்ள படம், ‘கப்ஜா’. சந்துரு இயக்கியுள்ள இந்தப் படம் வரும் 17-ம் தேதி வெளியாகிறது . கிச்சா சுதீப், சிவராஜ் குமார் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை தமிழில், லைகா வெளியிடுகிறது. சென்னையில், படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது உபேந்திரா கூறியதாவது:
இதன் டிரெய்லரை பார்க்கும் போதே, இது தொழில்நுட்பக் கலைஞர்களின் படம் என்று தெரிந்திருக்கும். இயக்குநர் சந்துருவின் 4 வருடக் கனவு இது. ‘பான் இந்தியா’ படம் பற்றிக் கேட்கிறார்கள்.
ஆரம்பத்தில் ஒரு மொழியில் ஒரு படம் ஹிட்டானால், அதை ரீமேக் செய்வார்கள். அல்லது சில மாதங்களுக்குப் பிறகு டப் செய்து வெளியிடுவார்கள். இப்போது ஒரே நேரத்தில் மற்ற மொழிகளிலும் வெளியிடுகிறார்கள். இது புதிய விஷயமல்ல.
இப்போது தென்னிந்திய படங்களுக்கு இந்தியிலும் வரவேற்பு இருப்பதாகக் கூறுகிறார்கள். அந்தக் காலத்தில் இருந்தே இது நடந்து வருகிறது. தமிழில் நான் ‘சத்யம்’ படத்தில் நடித்தேன். அடுத்தும் நடிக்க ஆவலாக இருக்கிறேன். இவ்வாறு உபேந்திரா கூறினார்.
பின்னர் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அவர், ‘இந்தியாவில் சூப்பர் ஸ்டார் என்றால் அது நடிகர் ரஜினிகாந்த் மட்டும்தான்’ என்றார். இயக்குநர் சந்துரு, ஸ்ரேயா உட்பட படக்குழுவினர் உடனிருந்தனர்.