தமிழில், ‘காதல் சொல்ல வந்தேன்’, ‘உயர்திரு 420’, ‘நந்தா நந்திதா’ ஆகிய படங்களில் நடித்தவர் மேக்னா ராஜ்.
கன்னடம், மலையாளம், தெலுங்கிலும் நடித்து வந்த இவர், பிரபல கன்னட நடிகரும் நடிகர் அர்ஜுனின் மருமகனுமான சிரஞ்சீவி சார்ஜாவைக் காதலித்து 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 2020-ம் ஆண்டு மாரடைப்பால் சிரஞ்சீவி சார்ஜா உயிரிழந்தார். அவர் மரணமடையும்போது மேக்னா ராஜ் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். பின்னர் அவருக்கு ஆண்குழந்தைப் பிறந்தது. குழந்தைக்கு ராயன் ராஜ் என்று பெயர் வைத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்த மேக்னா ராஜ், இப்போது மீண்டும் நடிக்கவருகிறார். ‘தத்சமா தத்பவா’ (Tatsama Tadbhava) என்ற கன்னட த்ரில்லர் படத்தில் நடிக்கிறார். இதை அறிமுக இயக்குநர் விஷால் ஆத்ரேயா இயக்குகிறார். “இது வித்தியாசமான கதையை கொண்ட படம். மலையாளம், கன்னடத்தில் உருவாகிறது” என்றார் மேக்னா.