தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா, அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். 4 மாதங்களாக எந்த சினிமா விழாக்களிலும் கலந்துகொள்ளாத அவர், ‘சாகுந்தலம்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நேற்று முன் தினம் கலந்துகொண்டார்.
இந்த விழாவில் குணசேகர், சமந்தாவை பாராட்டிப் பேசும்போது கண்ணீர் விட்டார் சமந்தா. பின்னர், எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும், சினிமா மீதான காதலை இழக்கவில்லை என்றார். இந்நிலையில், விழாவின் புகைப்படங்களைக் கண்ட ரசிகர் ஒருவர், ‘சமந்தாவின் அழகு போய்விட்டது, அதற்காக வருத்தப்படுகிறேன்’ என்று கூறியிருந்தார். இந்தப் பதிவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
இதையடுத்து சமந்தா, “என்னைப் போல மாதக்கணக்கில் சிகிச்சையும், மருந்துகளும் எடுத்துக் கொள்ளும் நிலை உங்களுக்கு வந்துவிடக்கூடாது என பிரார்த்திக்கிறேன். உங்கள் அழகுபிரகாசமாக என் அன்பைத் தருகிறேன்” என பதிவிட்டுள்ளார். அவரின் இந்தப் பதில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.