தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா, அதற்காக சிகிச்சைப் பெற்று வருகிறார். அவர் நடித்துள்ள ‘சாகுந்தலம்’ படம் பிப்.17ம் தேதி வெளியாகிறது. குணசேகர் இயக்கியுள்ள இந்தப் புராண காதல் கதையில், தேவ் மோகன் நாயகனாக நடிக்கிறார். இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா, ஹைதராபாத்தில் நேற்று நடந்தது. இயக்குநர் குணசேகர், இந்தப் படத்தின் உண்மையான ஹீரோ, சமந்தா என பாராட்டிப் பேசினார். அவர் பேச்சைக் கேட்டதும் சமந்தா கண்ணீர் விட்டார்.
பின்னர் சமந்தா பேசும்போது, “வாழ்க்கையில் பல போராட்டங்களைச் சந்தித்து இருக்கிறேன். ஆனால், சினிமா மீதான என் காதலும் சினிமா என் மீது வைத்துள்ள காதலும் நிலையானது. ‘சாகுந்தலம்’ மூலம் இந்தக் காதல் இன்னும் வளரும் என்று நினைக்கிறேன். சமீபத்தில் இந்தப் படத்தைப் பார்த்தேன். என் எதிர்பார்ப்புகளைத் தாண்டியதாக இருக்கிறது. படத்தைப் பார்த்துவிட்டு, குணசேகர் காலில் விழுந்துவிட்டேன். நான் அடைந்த அதே உணர்வுகளை படம் பார்க்கும் ஒவ்வொருவரும் அனுபவிப்பார்கள்” என்றார்.