இந்த ஆண்டு வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ தெலுங்கியிலிருந்து வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால், அதேசமயம் டோலிவுட்டில் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் வெளியான படங்களும் இந்த ஆண்டு மிக மோசமான தோல்வியை சந்திந்தித்துள்ளன. அது குறித்து பார்ப்போம்.
ராதே ஷ்யாம்: இயக்குநர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் கடந்த மார்ச் 11-ம் தேதி பிரபாஸ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் ‘ராதே ஷ்யாம்’. ரூ.300 கோடியில் உருவான இப்படம் பான் இந்தியா முறையில் வெளியிடப்பட்ட இப்படம் ரூ.140 கோடியை மட்டுமே வசூலித்து படுதோல்வியடைந்தது. கிட்டத்தட்ட ரூ.100 கோடிக்கும் மேலான நஷ்டத்தை படம் எதிர்கொண்டது. தோல்வி குறித்து பிரபாஸ் கூறுகையில், ‘‘கரோனா காரணமாக அல்லது ஸ்கிரிப்ட்டில் நாங்கள் எதையாவது மிஸ் செய்திருக்கலாம். அதனால் படம் தோல்வியடைந்தது’’ என கூறியிருந்தார்.
ஆச்சார்யா: கொரடலா சிவா இயக்கத்தில் நடிகர்கள் சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் இயக்கத்தில் வெளியான படம் ‘ஆச்சார்யா’. இதில் பூஜா ஹெக்டே, சோனுசூட் உள்ளிட்டோர் நடிந்ததிருந்தனர். கடந்த ஏப்ரல் 29-ம் தேதி வெளியான இப்படம் ரூ.140 கோடியில் உருவாக்கப்பட்டது. ஆனால், படம் வெறும் ரூ.70 கோடியை மட்டுமே வசூலித்து பாதிக்கு பாதி நஷ்டத்தை ஈட்டியது. ‘ஆச்சார்யா’ படத்தால் ஏற்பட்ட நஷ்ட ஈட்டை விநியோகஸ்தர்களிடம் சிரஞ்சீவி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சர்காரு வாரி பாட்டா: இயக்குநர் பரசுராம் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிந்திருந்த படம் ‘சர்காரு வாரி பாட்டா’. கடந்த மே12-ம் தேதி வெளியான இபடத்தில் கீர்த்தி சுரேஷ் சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ரூ.160 கோடியில் உருவான இப்படம் வெறும் ரூ.60 கோடியை மட்டுமே ஈட்டி படுதோல்வியடைந்தது.
லைகர்: இந்த ஆண்டில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு நஷ்டமடைந்த பட வரிசையில் விஜய் தேவரகொண்டாவின் ‘லைகர்’ பிரதான இடத்தைப்பிடித்துள்ளது. பான் இந்தியா முறையில் வெளியான இப்படத்தை பூரி ஜெகந்நாத் இயக்கியிருந்தார். ரூ.125 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் வெறும் ரூ.60 கோடிக்கும் குறைவான வசூலை ஈட்டியது. இதனால் ஏற்பட்ட நஷ்டத்தைக் கேட்டு விநியோகஸ்தர்கள் அண்மையில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.
தேங்க் யூ: விக்ரம்குமார் இயக்கத்தில் நாக சைதன்யா, ராஷிகண்ணா, மாளவிகா நாயர் நடிப்பில் உருவான படம் ‘தேங்க்யூ’. ஜூலை 22-ம் தேதி வெளியான இப்படம் தொடக்கத்திலிருந்தே எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டதால் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெறவில்லை. ரூ.40 கோடியில் உருவான இப்படம் ரூ.8 கோடியை வசூலித்து இந்த ஆண்டின் மோசமான தோல்வியை சந்தித்தது.