‘கே.ஜி.எஃப் 2’ சாதனை முறியடிப்பு: ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த கன்னட படம், ‘காந்தாரா’. செப்டம்பர் 30-ம் தேதி வெளியான இந்தப் படம், பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பிற மொழிகளில் டப் செய்யப்பட்டும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், 50 நாட்களைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கும் ‘காந்தாரா’, உலகம் முழுவதும் ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. ரூ.16 கோடியில் உருவான இந்தப் படம், ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்திருப்பது திரைத்துறையினரை வியக்க வைத்துள்ளது. இதற்கிடையே ‘கே.ஜி.எஃப் 2’ படம் கன்னடத்தில் அதிகபட்சமாக ரூ.155 கோடி வசூலித்து சாதனை படைத்திருந்தது. ரூ.168.5 கோடி வசூல் செய்து, ‘காந்தாரா’ அந்தச் சாதனையை முறியடித்துள்ளது.
நாக சைதன்யாவின் கஸ்டடி: வெங்கட்பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி நடிக்கும் படத்துக்கு ‘கஸ்டடி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் சிவா என்ற போலீஸ் அதிகாரியாக நாக சைதன்யா நடிக்கிறார். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்துக்கு இளையராஜா, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றனர். னிவாச சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீனிவாச சித்தூரி இதைத் தயாரிக்கிறார்.
நயன்தாராவின் கோல்டு ரிலீஸ் தேதி அறிவிப்பு: ‘நேரம்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அல்போன்ஸ் புத்திரன், அடுத்து ‘பிரேமம்' படத்தை இயக்கினார். இது சூப்பர் ஹிட்டானது. இதன் வெற்றியைத் தொடர்ந்து 7 வருடங்களுக்குப் பின்அவர் இயக்கியுள்ள மலையாளப் படம், ‘கோல்டு’. பிருத்விராஜ் நாயகனாக நடித்துள்ளார். இது செப். 8ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை. இந்நிலையில், டிச.1 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அல்போன்ஸ் புத்திரன் அறிவித்துள்ளார்.