நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். விஜய் உடன் அவர் நடிக்கும் ‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக தமிழ், தெலுங்கில் வரவிருக்கிறது. இந்நிலையில், அண்மையில் இவர் பகிர்ந்த இன்ஸ்டாகிராம் பதிவில், தன்னை வெறுத்து பதியப்படும் பின்னூட்டங்கள், விமர்சனங்களைப் பற்றி உருக்கமான கருத்தை முன்வைத்துள்ளார்.
அந்த நீண்ட இன்ஸ்டா பதிவில் அவர் கூறியிருப்பதின் முக்கிய அம்சம்: “நான் ட்ரோல் செய்யப்படுகிறேன். இது என் இதயத்தை நொறுக்குகிறது. என் உற்சாகத்தை சிதைக்கிறது. நான் சொல்லாததை வைத்தெல்லாம் என்னை கிண்டல் செய்கின்றனர். கேலிக்கு உள்ளாக்குகின்றனர். தவறான விஷயங்களைப் பரப்புவதால் எனக்கு உறவுச் சிக்கல்கள் ஏற்படும். அது சினிமா துறையிலும் பாதிப்பை ஏற்படுத்தும். அதற்கு வெளியேயும் சிக்கலை உருவாக்கும். நான் என்னை யாரும் விமர்சிக்கவே கூடாது என்று சொல்லவில்லை. விமர்சனங்கள் ஆக்கபூர்வமாக இருந்தால் சரி. அத்தகைய விமர்சனங்கள் உண்மையில் என்னை வளர்க்கும்.
ஆனால், வெறுப்பையும் எதிர்மறையான விமர்சனங்களையும் நான் எப்படி ஏற்றுக்கொள்வது? நான் யாராலும் புண்பட்டு புதைந்துவிட விரும்பவில்லை. இதை யாரையும் வெற்றி காணும் நோக்கத்திலும் எழுதவில்லை. நான் இருப்பது சினிமா துறை. இங்கே ஒரு பெண் மீது என்ன மாதிரியான விமர்சனங்கள் எல்லாம் வரும் என்று தெரிந்துதான் இத்துறையை நான் தேர்வு செய்துள்ளேன். எதிர்மறையான தவறான விமர்சனங்கள் வரும்போதெல்லாம் நான் கண்டுகொள்ளாமல் செல்லவே முயற்சிக்கிறேன். ஆனால், எவ்வளவு காலம் நான் அப்படியே செல்ல முடியும்” என்று ராஷ்மிகா அந்தப் பதிவில் கூறியுள்ளார்.