இந்த ஆண்டு வெளியான கன்னட படங்கள் மற்ற ஆண்டுகளைக் காட்டிலும் ரசிகர்களிடையே அதீத கவனத்தை ஈர்த்துள்ளன. அந்தப் படங்கள் குறித்து பார்ப்போம். பெரிய அளவில் கவனம் பெறாமலிருந்த கன்னட திரைத் துறை தற்போது நாடு முழுவதும் தனது திறமையை நிரூபித்து வருகிறது. அதுவும் குறிப்பாக பாக்ஸ் ஆபீஸில் 'கேஜிஎஃப் 2' படம் ரூ.1000 கோடி வசூலித்து உலக அளவில் கவனம் பெற்று, கன்னடத் திரைத் துறையின் முகத்தை மாற்றியுள்ளது. அந்த வகையில் தற்போது 'காந்தாரா' படம் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.
கேஜிஎஃப் 2 : இந்த ஆண்டை எடுத்துக்கொண்டால் ஏப்ரல் 14-ம் தேதி யஷ் நடித்த 'கேஜிஎஃப் 2' படம் ஆக்ஷன் - த்ரில்லருடன் உலக அளவில் பான் இந்தியா முறையில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. வெறும் ரூ.100 கோடி பட்ஜெட் கொண்ட படம் ரூ.1,207 கோடி வசூலித்தது என்றால் இந்த ஆண்டு கன்னட திரைத் துறை வரலாற்றின் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது.
ஜேம்ஸ்: கன்னட சினிமாவின் முண்ணனி நடிகரான புனித் ராஜ்குமார் நடிப்பில் வெளியான படம் 'ஜேம்ஸ்'. கடந்த மார்ச் 17-ம் தேதி வெளியான இப்படத்தின் பட்ஜெட் ரூ.50-70 கோடி. ஆனால், படம் உலகம் முழுக்க ரூ.151 கோடியை வசூலித்தது. ஜேத்தன் குமார் இயக்கிய படம் இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும் வசூலில் முன்னேற்றத்தைக் கண்டது.
777 சார்லி: கிரண் ராஜ் இயக்கத்தில் ரக்ஷித் ஷெட்டி நடிப்பில் கடந்த ஜூன் 10-ம் தேதி பான் இந்தியா முறையில் வெளியான படம் '777 சார்லி'. நாயுக்கும் மனிதனுக்குமான உறவை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. தவிர, ரூ.30 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வசூல் ரீதியாகவும் கவனம் பெற்றது. எமோஷனல் ட்ராமவாக உருவான படத்திற்கு ஐஎம்டிபி ரேட்டிங்கில் 8.9 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது.
விக்ராந்த் ரோணா: அனூப் பண்டாரி இயக்கத்தில் கிச்சா சுதீப் நடிப்பில் ஜூலை 28-ம் தேதி பான் இந்தியா முறையில் வெளியான படம் 'விக்ராந்த் ரோணா'. வித்தியாசமான கதைக்களத்துடன் 3டி தொழில்நுட்பத்தில் ஈர்க்கும் காட்சியமைப்பில் உருவான இப்படம் கலவையான விமர்சனங்களைப்பெற்றது. ரூ.90 கோடியில் உருவான இப்படம் ரூ.158 கோடிவரை வசூலித்ததுள்ளது.
காந்தாரா: ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள படம் 'காந்தாரா'. தொடக்கத்தில் கன்னட மொழியில் மட்டுமே வெளியான இப்படம் ரசிகர்களிடையே கிடைத்த அபரிமிதமான வரவேற்பு காரணமாக தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.170 கோடியை தற்போது வரை வசூலித்துள்ளது. விரைவில் ரூ.200 கோடி எட்டும் என கணிக்கப்படுகிறது. ரூ.20 கோடியில் தயாரித்த படம் ரூ.200 கோடியை எட்டும் என்பதன் மூலம் நல்ல சினிமாவுக்கு பிரமாண்ட பொருட்செலவு தேவையில்லை என்பதும், ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த சினிமாவை கைவிடுவதில்லை என்பதையும் இப்படம் உணர்த்தியுள்ளது.
இப்படியாக கன்னட சினிமாவுக்கு இந்த ஆண்டு வசூலை வாரிக் குவிக்கும் ஆண்டாகவும், விமர்சன ரீதியான படங்களுக்கு பக்கபலம் சேர்க்கும் ஆண்டாகவும் கருதப்படுகிறது.