'கல்ஃப்' நாடுகள் எனப்படும் வளைகுடா நாடுகளில் மோகன்லால் நடித்துள்ள 'மான்ஸ்டர்' படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. படத்தில் தன்பால் ஈர்ப்பாளர்கள் குறித்து காட்சிகள் இடம்பெற்றியிருப்பதால் இந்தத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
உதய்கிருஷ்ணா எழுத்தில் வைசாக் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள திரைப்படம் 'மான்ஸ்டர்'. ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு லக்ஷ்மி மஞ்சு, ஹனிரோஸ், சித்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தீபக் தேவ் இசையமைத்துள்ள இப்படம் வரும் அக்டோபர் 21-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்நிலையில், படத்தில் தன்பால் ஈர்ப்பாளர்கள் குறித்த காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் வளைகுடா நாடுகளில் படத்தை வெளியிட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கல்ஃப் நாடுகளின் சென்சார்ஷிப் அமைப்பு படத்தை வெளியிட அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது படத்தின் வசூலை கடுமையாக பாதிக்கும் என்பதால், தேவையான மாற்றங்களை செய்து படத்தை தணிக்கை குழுவிடம் மீண்டும் சமர்ப்பிக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எப்படியிருந்தாலும் இதுபோன்ற நடைமுறை சிக்கல்களை முடிக்க வேண்டியுள்ளதால் படம் இந்தியாவில் வெளியாகும் நாளன்று வளைகுடா நாடுகளில் வெளியாகாமல் போகலாம் என கூறப்படுகிறது.