கீர்த்தி சுரேஷ் பிறந்தநாளையொட்டி அவர் நடித்துவரும் 'தசரா' படத்தின் அவரது வெண்ணிலா கதாபாத்திர போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை அவரது ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
'அடடே சுந்தரா' படத்தைத் தொடர்ந்து நானி நடிக்கும் படம் 'தசரா'. ஸ்ரீகாந்த் ஒடிலா இயக்கும் இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானபோது, அதில் சில்க் ஸ்மிதா புகைப்படம் இடம்பெற்றியிருந்தது வைரலானது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, 'கைதி' புகழ் சத்தியன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, இந்தி மொழிகளில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் வெண்ணிலா கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. கிராமத்துப்பெண்ணாக இதில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் நானி, '' “வெண்ணிலா என்பது வெறும் பெயரல்ல. இது ஒரு எமோஷன். பிறந்தநாள் வாழ்த்துகள்" எனப் பதிவிட்டுள்ளார். படம் அடுத்த ஆண்டு மார்ச் 30-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.