பண்ணையாருக்கும் பழங்குடி மக்களுக்குமான நிலப் பிரச்சினையை பண்பாட்டுக் கூறுகளுடன் பதிவு செய்கிறது 'கந்தாரா' (Kantara) கன்னட படம்.
1847-ம் ஆண்டு காலகட்டத்தில் வாழும் அரசர் ஒருவரிடம் ஏராளமான நிலம், பணம், மரியாதை, என எல்லாமே தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது. மனைவி, மக்கள் இருந்தும் நிம்மதியில்லாமல் அலைந்துகொண்டிருக்கும் அவர், வீட்டிலிருந்து வெளியேறி நிம்மதியைத் தேடி வெவ்வேறு இடங்களுக்கு பயணிக்கிறார். அப்படி ஒரு காட்டுக்குள் நுழையும் அவர், அங்கு மக்கள் இணைந்து சாமியை வழிபடுவதை காண்கிறார். அதைக் கண்டதும் அந்த சாமியை கொடுத்து தனக்கு நிம்மதி கிடைக்க உதவுமாறு கோருகிறார். தொடக்கத்தில் மறுக்கும் அந்த பழங்குடி மக்கள், ஒரு சில நிபந்தனைகளுடன், அரசரிடம் நிலங்களைப்பெற்றுக்கொண்டு அவர்களின் கடவுளை கொடுத்துவிடுகின்றனர்.
அப்படியே கட் செய்தால், 1970-களில் நடக்கும் கதையில் அரசனின் பரம்பரையில் வந்தவர், அந்தப் பழங்குடி மக்களிடம் நிலத்தை கொடுக்க வலியுறுத்துகிறார். இதே நிலப் பிரச்சினையை 1990களில் நாயகனும் எதிர்கொள்கிறார். ஒருபுறம் பண்ணையார் ஒருவர் பழங்குடியினர் வாழும் நிலத்தை பறிக்க நினைக்கிறார்; மறுபுறம் கிராம மக்கள் வன பகுதியைஆக்கிரமித்துள்ளதாக அரசு தரப்பிலிருந்து புகார் எழுகிறது. இறுதியில் பழங்குடி மக்களுக்கான நிலம் மீட்கப்பட்டதா? இல்லையா? - இதை அவர்களின் பண்பாடு, கலாசாரத்துடன் சொல்கிற அழுத்தமான கன்னட படமான 'கந்தாரா'.
அண்மைக்காலமாக கன்னட சினிமாவின் முகம் மாறிவருகிறது. ஒரு காலத்தில் ரீமேக் படங்களுக்கான தளமாக இருந்த கன்னட சினிமா 'கேஜிஎஃப்' வருகைக்கு பின்பு உலக அளவில் கவனத்தை ஈர்த்தது. 'தியா', 'கருட கமனா விருஷப வாகன', '777 சார்லி' உள்ளிட்ட பல்வேறு படங்களின் வழி தன்னை நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள் கன்னடிகாஸ். அந்த வரிசையில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருக்கும் இப்படத்தின் பெரும் பலமே அதன் எங்கேஜிங் தான். முடிந்த அளவிற்கு பார்வையாளர்களை எங்கேஜ் செய்ய இயக்குநர் மெனக்கெட்டிருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். நில அரசியலை அரசு நிர்வாகம், நிலச்சுவான்தார்கள், பழங்குடியின மக்கள் என முக்கோணத்தில் இணைத்து திரைக்கதை எழுதியிருக்கும் விதம் சுவாரஸ்யத்திற்கு பெரிதும் கைகொடுக்கிறது.
முதல் பாதியில் 'கம்பளா' எனப்படும் எருமை மாட்டு போட்டி, அதையொட்டி சேற்றில் நடக்கும் சண்டைக்காட்சிகள் என காட்சி விருந்தாக பார்வையாளர்களை கவருகிறது படம். மற்றொருபுறம் யதார்த்ததுக்கு நெருக்கமான வாழ்விடங்கள், பழங்குடியின மக்களின் பண்பாட்டு கலாசாரம், வேட்டை தொழில் உள்ளிட்டவை கவனம் பெறுகின்றன. இடையில் வரும் பார்த்ததும் காதல், அதன் நீட்சியாக தொடரும் காதல் பாடல் இரண்டாம் பாதிக்கு அயற்சி. இறுதிக்காட்சியை மக்களின் நிலவியல் தன்மை சார்ந்து பதிவு செய்த விதம் ரசிக்க வைக்கிறது. படத்தில் ஆங்காங்கே வரும் ஒன்லைன் காமெடிகள் துருத்திக்கொண்டில்லாமல், கதையுடன் பிணைந்து எழுதப்பட்ட விதம் சிரிக்க வைக்கதவறவில்லை.
ரிஷப் ஷெட்டியின் நடிப்பு படத்திற்கு உயிரோட்டம் கொடுத்து காட்சிகளை மெருகேற்றுகிறது. ஆக்ரோஷத்தில் எதிரிகளை அடித்து துவம்சம் செய்வது, தன்னைச் சார்ந்தவர்களை பாதுகாக்க நினைப்பது, அவர்களின் இழப்பின்போது உடைந்து அழுவது என நடிப்பில் உச்சம் தொடுகிறார். குறிப்பாக இறுதிக் காட்சியில் அவர் ஆடும் ஆட்டமும், அதனுடன் சேர்ந்த நடிப்பும் தேர்ந்த கலைஞனுக்கான உருவகம். கறாரான வனத்துறை அதிகாரியாக கிஷோர். நாயகனுடன் முறுக்கிக் கொண்டு நிற்பது, தனது பணிக்கு இடையூரு ஏற்படும்போது திமிருவது என முதல் பாதியில் ஒருவகையான கதாபாத்திரமாகவும், இரண்டாம் பாதியில் அதற்கு முற்றிலும் மாற்றாகவும் தனக்கான கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்.
நாயகியாக சப்தமி கவுடா. காதலுக்காகவும், ரொமான்ஸ் காட்சிகளுக்காகவுமே பயன்படுத்தபடுகிறார். வழக்கத்திலிருந்து எந்த வகையிலும் மாறவில்லை. பண்ணையாராக அச்யுத் குமார் தேர்ந்த நடிகர் என்பதை நிரூபிக்கிறார். ஆனால், அவருக்கான கதாபாத்திரம் எளிதில் கணிக்க கூடியதாகிவிடுவதால் பெரிய அளவில் சுவாரஸ்யத்தை கொடுக்கவில்லை. மற்ற நடிகர்கள் தங்களுக்கான நடிப்பில் ஸ்கோர் செய்கின்றனர்.
படத்தின் மற்றொரு பெரிய பலம் அதன் தொழில்நுட்பக்குழு. வரைகலை, இசைக்கோர்வை, கலை ஆக்கம், சண்டைப்பயிற்சி, ஒலி வடிவமைப்பு உள்ளிட்டவை சிறந்த காட்சியனுபவத்திற்கு பக்கபலம் சேர்க்கின்றன. இடைவேளைக்கு முன்பான சண்டைக்காட்சிகளும், கம்பளா போட்டியும், இறுதிக்காட்சியில் திரையில் தெறிக்கும் வண்ணக்கலவையும் அரவிந்த் காஷ்யம் ஒளிப்பதிவில் அழகூட்டுகின்றன. அஜனீஷ் லோக்நாத் பிண்ணனி இசை காடுகளுக்குள் பார்வையாளர்கள் பயணிக்கும் அனுபவத்தை தர எத்தனிக்கிறது.
மிகை நாயகத்தன்மையும், தர்க்கப் பிழைகளும், திணிக்கப்பட்ட காதலும், நாயகனுக்குமான காரசாரமற்ற மோதலும் படத்தை பலவீனப்படுத்துகின்றன. மையக்கதையிலிருந்து படம் அவ்வப்போது வெளியேறி பாதை மாறுவது என நெளியவைக்கும் காட்சிகள் இல்லாமல் இல்லை. இப்படியான மிகச் சில குறைகளை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் 'காந்தாரா' வித்தியாசமான திரையனுபவத்திற்கு நிச்சயம் கொடுக்கும். தவறாமல் திரையரங்குகளில் கண்டு ரசிக்கத்தக்க சமகால படைப்பு இது.