ராமாயணத்தை தவறாக சித்தரித்துள்ள 'ஆதி புருஷ்' திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என கோரி 'பேன்ஆதிபுருஷ்' (#BanAdipurush) என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
இந்தியில் வெளியான ‘தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்' என்கிற படத்தை இயக்கி, தேசிய விருது பெற்றவர் ஓம் ராவத். இவரது இயக்கத்தில், ராமாயண கதையைத் தழுவி உருவாகிவரும் படம் ‘ஆதி புருஷ்'. இந்தியாவின் பல மொழிகளில் வெளியாகவிருக்கும் இப்படத்தில் கதையின் நாயகனாக ‘பாகுபலி’ புகழ் பிரபாஸும், அவருக்கு ஜோடியாக கீர்த்தி சனோனும் நடித்திருக்கிறார்கள்.
டி - சீரிஸ்,ரெட்ரோஃபைல்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படம், ஐமேக்ஸ், 3டி முறையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இப்படத்தின் டீசரை படக்குழு அயோத்தியில் வெளியிட்டது. 'ஆதி புருஷ்' படத்தின் டீசரில் உள்ள கிராஃபிக்ஸ் காட்சிகள் வீடியோ கேம் போலவும், சோட்டா பீம் டீசர் போலவும் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. படத்தில் ராவணனாக நடித்திருக்கும் சயீஃப் அலிகான் கதாபாத்திரம் குறித்தும் விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த படம் கலாச்சாரத்தை தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறி 'ஆதிபுருஷ்' படத்தை தடை செய்ய வேண்டும் என நெட்டிசன்கள் ட்விட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அண்மையில் ரிலீசாகும் படங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 'பாய்காட்' என்ற ஹேஷ்டேக்குடன் நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வந்தனர்.
ஆனால் தற்போது இந்தப்படத்திற்கு பாய்காட் என்பதற்குப் பதிலாக தடை செய்ய வேண்டும் என ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்தப் படம் ராமாயண கதையை தவறாக சித்தரிப்பதாகவும், இந்திய கலாச்சாரத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். டீசரில் பிரபாஸ் ஷூ அணிந்திருப்பது குறித்தும் நெட்டிசன்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
’படத்தை தடை செய்வது மட்டும் போதாது. டீசரை சமூகவலைதள பக்கத்திலிருந்து நீக்க வேண்டும்' என்று நெட்டிசன் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
மற்றொருவர், 'ராவணன் சித்தரிப்பு படத்தில் மோசமாக உள்ளது' என குறிப்பிட்டு படத்தை தடை செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நெட்டிசன்களில் ஒருவர், ''ராமன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரபாஸ் ஷூவை அணிந்து கொண்டு நடந்து வருகிறார். ஆனால் யதார்த்தத்தில் அப்படியில்லை'' என குறிப்பிட்டுள்ளார்.