தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் தாயார் இந்திரா தேவி இன்று அதிகாலை 4 மணி அளவில் உடல்நலக்குறைவால் காலமானார். 70 வயதான அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகராக வலம் வந்தவர் கிருஷ்ணா. இவரது மனைவி இந்திராதேவி. இவர்களது மகன்தான் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் மகேஷ்பாபு. கடந்த சில நாட்களாக மகேஷ்பாபுவின் தாயார் இந்திராதேவி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நலம் மிகவும் மோசமான நிலையில், சிறிது நேரம் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்த அவர் இன்று அதிகாலை 4 மணி அளவில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினரும், மகேஷ்பாபு ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''இந்திரா தேவியின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்த துயர நேரத்தில் கிருஷ்ணா, மகேஷ் அண்ணா மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்'' என பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில், “மகேஷ் பாபு காருவின் தாயார் இந்திரம்மாவின் மறைவு செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். கிருஷ்ணா காரு, மகேஷ்பாபு மற்றும் குடும்பத்தினருக்கு எனது பிரார்த்தனைகளையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என பதிவிட்டுள்ளார்.
நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், ''ஆழ்ந்த இரங்கல்கள் மற்றும் பிரார்த்தனைகள். அம்மா உங்கள் அனைவருக்கும் ஒளியாக இருப்பார்!'' என பதிவிட்டுள்ளார்.
Our deepest condolences and prayers
மகேஷ்பாபுவின் சகோதரி மஞ்சுளா காட்டமனேனி தனது ட்விட்டர் பக்கத்தில், ''நீங்கள் தான் என் முதல் குரு. உங்கள் அன்பு தான் எனக்கு பாதுகாப்பு. என் வாழ்க்கையில் எல்லாமே நீங்கள் தான். ஐ லவ்யூ!'' என பதிவிட்டுள்ளார்.