நடிகர் ஸ்ரீனிவாசனுடன் திரும்பியிருக்கும் நடிகை ஸ்மினு சிஜோ. 
தென்னிந்திய சினிமா

உடல்நலம் பாதிப்பால் உருமாறிய மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன்

என்.சுவாமிநாதன்

திருவனந்தபுரம்: உடல்நலக் குறைவால் வீட்டில் ஓய்வெடுத்து வரும் பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசனை சந்தித்து திரும்பிய நடிகை ஸ்மினு சிஜோ இதுகுறித்து தன் இன்ஸ்டாகிராமில் புகைப் படத்தைப் பதிவிட்டுள்ளார். அதைப் பார்த்த மலையாளிகள் நடிகர் ஸ்ரீனிவாசனா இது என உடைந்து போயுள்ளனர்.

மலையாளத்தில் நகைச்சுவை நடிப்பால் மிகவும் பிரபலம் ஆனவர் ஸ்ரீனிவாசன். 200-க்கும்அதிகமான படங்களில் நடித்திருக்கும் இவர் சிறந்த திரைக்கதைக்காகவும் 2 முறை கேரள திரைப்பட விருதைப் பெற்றவர். இவரது திரைக்கதைகள் அனைத்தும் நகைச்சுவையோடு கூடிய சமூகத்தின் நிஜங்களின் அருகே நின்று பேசும். ஸ்ரீனிவாசன் சில படங்களை இயக்கவும், தயாரிக்கவும் செய்துள்ளார்.

அண்மையில் நடிகர் ஸ்ரீனிவா சனுக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதன்பின்னர் மிகவும் நலிவுற்று வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார்.

அண்மையில் மலையாளத் தொலைக்காட்சி ஒன்று, மலையாள திரைக்கலைஞர்கள் சங்கமான `அம்மா'` அமைப்போடு சேர்ந்து ஓணம் நிகழ்ச்சி நடத்தியது. அதில் நீண்ட இடைவெளிக்குப் பின்பு மேடையேறிய ஸ்ரீனிவாசனை, நடிகர் மோகன்லால் கன்னத்தில் முத்தமிட்டு வரவேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது, நடிகர் ஸ்ரீனிவாசனை சந்தித்து இருக்கும் நடிகை ஸ்மினு சிஜோ, “அவருக்கு சின்ன, சின்ன உடல்நலப் பிரச்சினைகள்தான் இருக்கின்றன. மறுபடியும் உடல்நல ஆரோக்கியத்தோடு திரைக் கதையிலும் வருவார். அவரது 2 மகன்கள் வினித், தியானின் திரைப் பங்களிப்பை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார். அதிலும் தியான் யூடியூப்.களுக்குக் கொடுக்கும் நேர்காணல், பேட்டிகளை நகைச் சுவையாகக் கையாள்வதையும் குறிப்பிட்டார்” என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார். ஸ்ரீனிவாசனின் மனைவி விமலா அவரை உடன் இருந்து கவனித்துக்கொள்கிறார்.

SCROLL FOR NEXT