தென்னிந்திய சினிமா

6 படங்கள் படுதோல்வி; பல கோடி நஷ்டம்... தொடருமா பான்-இந்தியா திரைப்படங்கள்?

செ. ஏக்நாத்ராஜ்

இந்தாண்டு வெளியான பான் இந்தியா படங்களில் இதுவரை 6 படங்கள் மோசமானத் தோல்வியைச் சந்தித்துள்ளதால், தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஒரு மொழியில் உருவாகும் படங்களை, மற்ற மொழி ரசிகர்களும் ஏற்பார்கள் என்ற நிலையில், டப் செய்யப்பட்டு வெளியிடப்படுவது வழக்கம். இப்போது அதற்கு ‘பான் இந்தியா’ என்ற புதுப் பெயரைச் சூட்டி டிரெண்டாக்கி இருக்கிறார்கள். ‘பாகுபலி’, ‘கே.ஜி.எஃப்’ படங்களின் கதைகள் மொழி தாண்டி ரசிக்கப்பட்டதால் வசூல் குவிந்தது.

இதன் இரண்டாம் பாகங்களும் வரவேற்பைப் பெற்றன. அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’வும் பான் இந்தியா முறையில் வெளியாகி ஹிட்டானது. இந்தப் படங்களுக்குக் கிடைத்த வரவேற்பால், பெரியபட்ஜெட் படங்கள் அனைத்தையும் டப் செய்து மற்ற மொழிகளிலும் வெளியிட முடிவு செய்தனர், தயாரிப்பாளர்கள். இந்தாண்டு அப்படி வெளியிடப்பட்ட 6 படங்கள் படுதோல்வியைச் சந்தித்துள்ளன.

பிரபாஸ், பூஜா ஹெக்டே நடித்த பீரியட் படமான ’ ராதே ஷ்யாம்’ ரூ.250 கோடியில் உருவாகி அதில் பாதியளவு கூட வசூலிக்கவில்லை. இந்தியில் உருவான ‘சம்ஷேரா’வை கரண் மல்ஹோத்ரா இயக்கி இருந்தார். ரன்பீர் கபூர், வாணி கபூர் நடித்த இந்தப் படம், ரூ.150 கோடியில் உருவாகி, ரூ.63 கோடி மட்டுமே வசூலித்ததாகச் சொல்கிறார்கள்.

அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவான வரலாற்றுப் படம், ‘சாம்ராட் பிருத்விராஜ்’. சந்திரபிரகாஷ் திவேதி இயக்கிய இந்தப் படத்தை, ரூ.250 கோடிக்கு மேல் செலவு செய்து உருவாக்கினார்கள். தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளிலும் வெளியான இந்தப் படம் வெறும் ரூ.90 கோடியை மட்டுமே வசூலித்திருக்கிறது.

ஆமிர்கானின் ‘லால் சிங் சத்தா’வும் மோசமாகவே வசூலித்து இருப்பதாகச் சொல்கிறார்கள். ரூ.130 கோடியில் உருவான விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே நடித்த ’லைகர்’ரூ.55 கோடியை மட்டுமே வசூலித்திருக்கிறது. இந்த லிஸ்ட்டில் விக்ரம் நடித்த ‘கோப்ரா’வையும் சேர்த்துக்கொள்ளலாம்.

பான் இந்தியா படங்களின் தொடர் தோல்வியால் பல கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்திருக்கிறார் கள் தயாரிப்பாளர்கள். இந்த நஷ்டத்தால், விஜய் தேவரகொண்டா, புரி ஜெகநாத் அடுத்து இணைய இருந்த ‘ஜனகணமன’ நிறுத்தப்பட்டுள்ளது. ’லைகர்’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கரண் ஜோஹரும் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் படம் ஒன்றை நிறுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது.

பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் தொடர் தோல்வியைச் சந்தித்து வருவதால், பான் இந்தியா படங்கள் உருவாவது தொடருமா?

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிடம் கேட்டோம். ‘‘எல்லா தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் விதமான படைப்புகளை உருவாக்குவது எப்போதும் சாத்தியமில்லை. பான் இந்தியாவை பாசிட்டிவாக பார்த்தால், சினிமாவின் வியாபார எல்லை விரிவடைகிறது. அதனால் தரமான படங்களை உருவாக்க முடியும்.

ஒவ்வொரு விஷயமும் கற்றுக்கொள்வதுதான். முதலில் நான்கைந்து படங்கள், பான் இந்தியா முறையில் வெற்றி பெற்றதும் அடுத்தடுத்து படங்கள் உருவானது. சில படங்கள் தோல்வி அடைந்துவிட்டால், அதை முழுவதுமாக ஒதுக்கிவிடவோ, வெற்றி பெற்றால் எல்லோருமே, பான் இந்தியா படங்கள் பண்ணுவதோ இல்லை. வெற்றி தோல்வி என்பது எங்கும் எப்போதும் இருக்கிறது. இது ஒரு சுழற்சிதான்’’ என்கிறார்.

SCROLL FOR NEXT