தமிழில், இது என்ன மாயம், நிமிர், எப்.ஐ.ஆர் உட்பட சில படங்களில் நடித்திருப்பவர், மலையாள நடிகை மாலா பார்வதி. இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு எண்ணில் இருந்து தொடர்ந்து போன் அழைப்பு வந்ததால், பேசினார். எதிர்முனையில் பேசியவர், தான், ‘777 சார்லி’ இயக்குநர் கிரண்ராஜ் என்றும் தனது அடுத்தப் படத்துக்கு 18 நாட்கள் கால்ஷீட் வேண்டும் என்று கேட்டுள்ளார். சந்தேகமடைந்த மாலா, ‘777 சார்லி’ படத்தில் பணியாற்றிய, ராதாகிருஷ்ணன் என்பவரிடம் விசாரித்துள்ளார்.
அவர், கிரண்ராஜிடம் இதைச் சொல்லி, உங்கள் பெயரில் ஒருவர் கால்ஷீட் கேட்டுள்ளார் என்று கூறியதும் அவர் அதிர்ச்சி அடைந்தார். பிறகு அந்த எண்ணுக்கு கான்ஃபிரன்ஸ் காலில் பேசி மோசடி பேர்வழியை பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி, மாலா பார்வதி அந்த நபருக்கு போன் செய்து, மீண்டும் விசாரித்தபோது, ‘நான், ‘777 சார்லி’ இயக்குநர் கிரண்ராஜ்’ என்று சொன்னார். கான்ஃபிரன்ஸ் காலில் இருந்த கிரண்ராஜ், ‘அந்தப் படத்தை இயக்கியவன் நான்தான், நீங்கள் எப்படி?’ என்றதும், அடுத்த நொடியே அழைப்பைத் துண்டித்துவிட்டு மர்மநபர் மாயமாகிவிட்டார்.
இதுகுறித்து பேசிய கிரண்ராஜ், மாலா பார்வதி மூத்த நடிகை என்பதால் திறமையாக இதை கையாண்டார். இளம் பெண்கள் இதுபோன்ற அழைப்புகளில் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.