தமிழில், ‘காதல் சொல்ல வந்தேன்’, ‘உயர்திரு 420’, ‘நந்தா நந்திதா’ உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் கன்னட நடிகை மேக்னா ராஜ். பிரபல நட்சத்திர தம்பதியான சுந்தர்- பிரமிளாவின் மகளான இவர், கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவை காதலித்து 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 2020-ம் ஆண்டு சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பால் மரணமடைந்தார். அப்போது மேக்னா ராஜ் கர்ப்பிணியாக இருந்தார்.
பின்னர் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. கணவரை இழந்த சோகத்தில் இருந்து மீண்டு வருகிறார் மேக்னா. இந்நிலையில், 2-வது திருமணம் பற்றி அவர் கூறும்போது, ‘‘கணவர் இறந்த பின்பு, குழந்தையை வளர்ப்பது மற்றும் அவன் எதிர்காலம் பற்றி சிந்தித்து வருகிறேன். ஒரு கூட்டம் 2-வது திருமணம் செய்ய சொல்கிறது. சிலர், உங்கள் மகனுடன் மகிழ்ச்சியாக இருங்கள் என்கிறார்கள். நான் எதைக் கேட்பது? நான் அந்த கேள்வியை என்னிடம் இன்னும் கேட்கவில்லை. இந்த தருணத்தை வாழ்ந்துவிட வேண்டும் என்று என் கணவர் சொல்வார். அதனால் நாளை பற்றி யோசிப்பதில்லை.'' என்று தெரிவித்துள்ளார்.