திரைப்படப் படப்பிடிப்புகளை நிறுத்திவைத்துள்ள தெலுங்கு தயாரிப்பாளர்கள் பல அதிரடி முடிவுகளை எடுத்துள்ளனர்.
தயாரிப்புச் செலவுகள் உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்துவது, நடிகர்களின் சம்பளம், திரையரங்க டிக்கெட் கட்டணம், விபிஎப் கட்டணம், ஓடிடி-யில் படங்களை வெளியிடுவது உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து பேசி முடிவு செய்தபின், படப்பிடிப்புகளைத் தொடர, தெலுங்கு நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இதற்கு தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை உட்பட சில சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன.
அதன்படி கடந்த 1-ம் தேதி முதல் தெலுங்கு திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இப்போது அது, சுமுகமான முடிவை எட்டி இருப்பதாகக் கூறப்படுகிறது. இன்னும் சில நாட்களில் படப்பிடிப்புகள் தொடங்கும் என்ற நிலையில், தயாரிப்பாளரும் தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை நிர்வாகியுமான காட்ர கட்ட பிரசாத்திடம் விசாரித்தோம்.
அவர் கூறியதாவது: இப்போது சில முடிவுகள் எடுத்திருக்கிறோம். நடிகர்களுக்கு, நாள் கணக்கு சம்பளம் என்ற முறையை ஒழித்துவிட்டு, படத்துக்கு என சம்பளம் கொடுக்க வேண்டும் என்று பேசி இருக்கிறோம்.
ஒரு படத்துக்கான கால்ஷீட்டை 12 மணி நேரமாக மாற்றவும் (இப்போது 8 மணி நேரம்) நடிகர், நடிகைகளின் உதவியாளர்கள் பேட்டாவை அவர்களே கொடுக்க வேண்டும், எந்த தயாரிப்பாளரும் வேண்டிய தொழிலாளர்களை வைத்து பணியாற்றிக் கொள்ளலாம் என்று ஆலோசித்துள்ளோம்.
இயக்குநர்கள் முழு ஸ்கிரிப்டுடன் படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும், ஒரு படம் திரையரங்கில் வெளியாகி 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும் என்றும் முடிவு செய்திருக்கிறோம்.
மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் டிக்கெட், உணவு மற்றும் குளிர்பானங்களின் விலையை குறைப்பது குறித்து பேச இருக்கிறோம். பெப்சியில் உள்ள 24 அமைப்புகளிடமும் இப்போது பேசி வருகிறோம். அடுத்து நடிகர் சங்கம், இயக்குநர் சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம். இறுதி முடிவுக்கு பின்னர் படப்பிடிப்புகள் தொடங்கும்.
இவ்வாறு காட்ர கட்ட பிரசாத் கூறினார்.