கிச்சா சுதீப் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் 'விக்ராந்த் ரோணா' திரைப்படம் ரூ.200 கோடி வசூலை விரைவில் எட்டும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அனூப் பண்டாரி இயக்கத்தில் கிச்சா சுதீப் நடித்து கன்னடத்தில் உருவான படம் 'விக்ராந்த் ரோணா'. கடந்த ஜூலை 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரூ.95 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. படத்தில் நீரூப் பண்டாரி, நீதா அசோக், மதுசூதன் ராவ், ரவிசங்கர் கவுடா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதில் ஜாக்லீன் பெர்னான்டஸ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
பான் இந்தியா முறையில் வெளியிடப்பட்ட இந்தப் படம் ஆக்ஷன் - த்ரில்லர் கதைக்களத்துடன் 3டியில் உருவாக்கப்பட்டது.
'விக்ராந்த் ரோணா' கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும், உலகம் முழுவதும் 8-வது நாள் முடிவில் ரூ.150 கோடியை வசூல் செய்துள்ளது. விரைவில் படத்தின் வசூல் ரூ.200 கோடியாக உயரும் எனத் திரைத் துறை வர்த்தகர்கள் கணித்துள்ளனர். முன்னதாக, படம் வெளியான முதல் நாள் உலகம் முழுவதும் ரூ.35 கோடி வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.