நடிகர் மம்முட்டி நாயகனாக நடிக்கும் மலையாள படத்தில் நடிகர் வினய் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பி.உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் மலையாள நடிகர் மம்முட்டி நடிக்க உள்ளார். தலைப்பு வைக்கப்படாத இப்படம் த்ரில்லர் பாணியில் உருவாக உள்ளது.
இந்தப் படத்தில் நடிகைகள் ஸ்நேகா, ஐஸ்வர்யா லக்ஷ்மி மற்றும் அமலா பால் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
உதய் கிருஷ்ணா திரைக்கதை எழுதும் இப்படத்தில் மம்முட்டி போலீஸ் கேரக்டரில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எர்ணாகுளம் மற்றும் வண்டிப் பெரியார் பகுதியில் இப்படத்திற்கான படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியுள்ளது. தவிர, ஷைன் டாம் சாக்கோ, திலீஷ் போத்தன், சித்திக், ஜினு ஆபிரகாம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் தமிழ் நடிகர் வினய் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் வினய் மலையாளத்தில் நடிகராக அறிமுகமாக உள்ளார்.