'கஷ்டங்களும், தடைகளும்தான் என்னை வலிமையாக்கியுள்ளது' என்று நடிகர் கிச்சா சுதீப் தெரிவித்துள்ளார்.
'நான் ஈ' படத்தின் மூலம் திரை ரசிகர்களுக்கு பரிட்சயமானவர் கிச்சா சுதீப். இவர் தற்போது 'விக்ராந்த் ரோணா' என்ற பான் இந்தியா படத்தில் நடித்துள்ளார். அனுப் பண்டாரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நிரூப் பண்டாரி , நீதா அசோக் உட்பட பலர் நடித்துள்ளனர்.
ஃபேண்டஸி ஆக்ஷன் அட்வெஞ்சர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம், 3டி-யில் கன்னடம், இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ளது. வரும் 28-ம் தேதி படம் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், படம் குறித்து பேசியுள்ள நடிகர் சுதீப், " நான் இயக்குநராக வேண்டும் என்று தான் சினிமாவுக்குள் நுழைந்தேன். ஆனால். நடிகனாகி விட்டேன். பிறகு ஆறு படங்களை இயக்கி இருக்கிறேன். என் சினிமா பயணம் எளிதானதல்ல என்பதில் எனக்குப் பெருமை. உங்கள் பயணத்தில் நினைவில் இருப்பது எது என்று கேட்டால், என் போராட்டங்கள் என்பேன். நல்ல விஷயங்கள் எப்போதும் எதையும் கற்றுத்தரவில்லை. தவறுகளில் இருந்தே கற்றுக்கொள்கிறேன். அப்படித்தான் கற்றுக்கொண்டேன். கஷ்டங்களும் தடைகளும்தான் என்னை வலிமையாக்கியது" என்றார்.
மேலும், நாடு முழுவதும் திரைப்படங்கள் வழியாக நீங்கியுள்ள மொழித்தடைகள் குறித்து பேசிய அவர், “உ.பி மற்றும் பஞ்சாபில் அமர்ந்து கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களை தற்போது பார்க்க முடியும். இந்தியாவில் கட்டுப்பாடுகள் மற்றும் மொழித் தடைகள் நீங்கியுள்ளதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
தெற்கில் உள்ள படங்கள் தற்போது வடக்கில் திரையரங்குகளில் வெளியாகின்றன. நான் டெல்லி, கோவா, மும்பை, ஜெய்ப்பூர் என்று செல்லும் போதெல்லாம், மக்கள் என்னை அடையாளம் கண்டுகொண்டு இவர்தான் 'பாஜிராவ்' பட ஹீரோ என்று சொல்வார்கள், ஏனென்றால் என்னுடைய 'கெம்பே கவுடா' (Kempe Gowda) படம் இந்தியில் பாஜிராவ் என்ற பெயரில் டப் செய்யப்பட்டது. டிவியில் மட்டுமே எங்கள் படங்கள் ஒளிபரப்பானதால் அவர்கள் எங்களை சாட்டிலைட் நட்சத்திரங்களாக மட்டுமே அறிந்தார்கள். ஆனால், இப்போது மாறியிருக்கிறது.
நீங்கள் பஞ்சாப் சென்றால் அவர்களுக்கு பஞ்சாபி படங்களும் இந்தி படங்களும் தெரியும். அதேபோல மேற்கு வங்கத்திலும் பெங்காலி படங்களும் இந்தி படங்களும் அவர்களுக்கு நன்கு பழகப்பட்ட ஒன்று. காரணம் இந்தி உலகளவில் இருந்தது. ஆனால் எங்கள் படங்கள் திரையரங்குகளில் ஓடாததால் அவர்களுக்கு தென்னிந்திய படங்கள் பற்றி தெரியாது. தாய்லாந்து மற்றும் கொரிய தொடர்கள் வெளிவருவதைப் போல, எங்கள் படங்களும் வெளிவருகின்றன. கிட்டத்தட்ட 15 வருட மாற்றம் இது'' எனத் தெரிவித்துள்ளார்.