அண்மையில் வெளியான திரைப்படத்தில் சர்ச்சை வசனம் இடம் பெற்றது தொடர்பாக கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து மன்னிப்பு கோரினார் நடிகர் பிருத்விராஜ்.
பிருத்விராஜ், விவேக் ஓபராய், சம்யுக்தா மேனன் உட்பட பலர் நடித்துள்ள படம் ’கடுவா’. ஷாஜி கைலாஷ் இயக்கியுள்ள இப்படம் கடந்த 7-ம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், படத்தில் மாற்றுத் திறன் குழந்தைகளை காயப்படுத்தும் விதமாக வசனங்கள் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. இதற்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இயக்குநர் ஷாஜி கைலாஷ், தயாரிப்பாளர்கள் லிஸ்டின் ஸ்டீபன், சுப்ரியா மேனன் ஆகியோருக்கு கேரள மாநில மாற்றுத்திறனாளிகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
இதையடுத்து, ஷாஜி கைலாஷும் பிருத்விராஜும் மன்னிப்பு கேட்டுள்ளனர். ’’படத்தில் இடம்பெற்றுள்ள அந்த வசனம், வில்லனின் கொடுமையை நம்ப வைப்பதற்காகவே சேர்க்கப்பட்டது. மற்றபடி எந்த உள்நோக்கமும் இல்லை. இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்’’ என்று முகநூலில் ஷாஜி கைலாஷ் தெரிவித்துள்ளார். இதை பிருத்விராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.