தென்னிந்திய சினிமா

“ஆன்மிக ரீதியான ‘777 சார்லி’ க்ளைமாக்ஸ் பற்றி ரஜினி நெகிழ்ந்து பேசினார்” - ரக்‌ஷித் ஷெட்டி

செய்திப்பிரிவு

''777 சார்லி' படத்தைப் பார்த்துவிட்டு ஆன்மிக ரீதியான க்ளைமாக்ஸ் குறித்து நடிகர் ரஜினிகாந்த் வியந்து பேசியதாக அப்படத்தின் நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

கிரண்ராஜ் இயக்கத்தில் கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி நடிக்கும் படம் '777 சார்லி'. இந்தப் படத்தில் பாபி சிம்ஹா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பாபி சிம்ஹா நடிக்கும் முதல் கன்னட திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

கன்னடத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியானது. கடந்த 10-ம் தேதி வெளியாகி, ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. மனிதனுக்கும், நாய்க்கும் உள்ள பாசப்பிணைப்பை நெகிழ்ச்சியுடன் படம் பதிவு செய்தது.

இந்தப் படத்தை கர்நாடக மாநில முதல்வர் பசரவாஜ் பொம்மை அண்மையில் பார்த்தார். இதையடுத்து ஜூன் 19 முதல் 6 மாதங்களுக்கு '777 சார்லி' டிக்கெட்டுகளின் விற்பனைக்கு மாநில சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்படாது என்று கர்நாடக நிதித் துறை அதிகாரபூர்வ உத்தரவில் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தைப் பார்த்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக படத்தின் நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், ''ரஜினிகாந்த் சாரிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. 777 சார்லி படத்தை அவர் நேற்று இரவு பார்த்து பிரமித்து உள்ளார். படம் தரமான வகையில் உருவாக்கப்பட்டுள்ளது குறித்தும், படத்தின் ஆழமான வடிவமைப்புகள் குறித்தும், குறிப்பாக படத்தின் க்ளைமாக்ஸ் குறித்தும் வியந்து பேசினார். அதாவது ஆன்மிக ரீதியான அந்த க்ளைமாக்ஸை அவர் நெகிழ்ந்து பேசினார். சூப்பர் ஸ்டாரிடம் இருந்து இப்படியான வார்த்தைகளை கேட்பது அற்புதமாக உள்ளது. மிக்க நன்றி ரஜினிகாந்த் சார்'' என்று பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT