சங்கீதா சஜித் 
தென்னிந்திய சினிமா

பின்னணி பாடகி சங்கீதா சஜித் காலமானார்

செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்தவர் பிரபல பின்னணிப் பாடகி சங்கீதா சஜித் (46). தமிழில் ‘மிஸ்டர் ரோமியோ’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இடம்பெற்ற ‘தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை’ உட்பட பல ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடியுள்ளார்.

கே.பி.சுந்தராம்பாளின் ‘ஞானப்பழத்தைப் பிழிந்து’ பாடலை, அதேராகத்தில் பாடுவதில் சிறந்தவர்.

தமிழக அரசின் திரைப்பட விருது வழங்கும் விழாவில் அந்தப் பாடலை சங்கீதா பாடியபோது, அதைக் கேட்டுக்கொண்டிருந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவரைப் பாராட்டி, தனது கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்கச் சங்கிலியை பரிசாக அளித்து கவுரவித்தார்.

கடந்த சில மாதங்களாக சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த சங்கீதா, திருவனந்தபுரத்தில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கி, சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் நேற்று காலை அவர் உயிரிழந்தார்.

சென்னையில் வசித்து வந்த சங்கீதாவுக்கு, அபர்ணா என்ற மகள் இருக்கிறார். சங்கீதா சஜித் மறைவுக்கு இசைக் கலைஞர்கள், திரையுலகினர், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT