'மொழி சர்ச்சை தொடர்பாக பிரதமர் மூலமாக சில கருத்துக்கள் வெளிவருவதை காண்பது பெருமையும் பாக்கியமும் நிறைந்தது' என்று கன்னட நடிகர் கிச்சா சுதீப் தெரிவித்துள்ளார்.
இந்தி மொழி சர்ச்சை சமீபகாலமாக தமிழகத்தை தாண்டி தெலுங்கு சினிமா, கன்னட சினிமா நடிகர்கள் வரை நீண்டு வருகிறது. சில நாட்கள் முன் கன்னட நடிகர் கிச்சா சுதீப் இந்தி மொழி குறித்து பேசியதும், அதற்கும் அஜய் தேவ்கன் பதிலளித்ததும் சர்ச்சைகள் ஆனது. இதனிடையே, நேற்று ராஜஸ்தானில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, "ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் இந்தியாவின் அடையாளம் தான். கடந்த சில நாட்களாக, மொழி அடிப்படையில் சர்ச்சைகளை கிளப்ப முயற்சிகள் நடப்பதை பார்க்கிறோம். இவர்களிடம் பாஜக தொண்டர்கள் கவனமாக இருக்க வேண்டும். பாஜக ஒவ்வொரு மாநில மொழியிலும் இந்திய கலாச்சாரத்தின் பிரதிபலிப்பைக் காண்கிறது. இவற்றை மதித்து வணங்குகிறது" என்று தெரிவித்திருந்தார்.
பிரதமரின் இந்த பேச்சுகளை வரவேற்று கருத்து தெரிவித்துள்ள நடிகர் கிச்சா சுதீப், "இந்த விஷயத்தில் பிரதமர் மூலமாக சில கருத்துக்கள் வெளிவருவதை காண்பது பெருமையும் பாக்கியமும் நிறைந்தது. கலவரத்தையோ அல்லது விவாதத்தையோ தொடங்க வேண்டும் என நினைத்து அந்தக் கருத்தை நான் தெரிவிக்கவில்லை. எந்தவித நோக்கமும் இல்லாமல் இந்தி சர்ச்சை சம்பவமும் நிகழ்ந்தது. நான் கூறிய கருத்தை தான் பிரதமரும் எதிரொலிக்கிறார்.
பிரதமரின் கருத்து அனைத்து மொழிகளுக்கும் ஒரு வரவேற்பு போன்றது. நான் கன்னடத்தை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அனைத்து மொழிகளுக்கும் ஆதரவாகவே எனது கருத்து இருக்கும். எனது கருத்து இன்று பிரதமர் பேச்சுக்கள் மூலம் மதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியை நாங்கள் ஒரு அரசியல்வாதியாக மட்டும் பார்க்கவில்லை. அவரை ஒரு தலைவராகவும் பார்க்கிறோம்" என்று தனியார் டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்