தென்னிந்திய சினிமா

வெற்றிபெறுமா சிபிஐ -5?

ஆர்.ஜெயக்குமார்

மலையாள சினிமாவான ‘சிபிஜ -5’ இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளது.
மலையாளத்தின் சிறந்த சீக்குவல் சினிமா, என இந்த சிபிஐ படங்களைச் சொல்லலாம். மம்மூட்டி சிபிஐ அதிகாரியாக நடித்த இந்தப் படங்கள் கேரளத்தில் வசூல் வேட்டையை நடத்தியவை. 1988-ல் இதன் முதல் பாகம் வெளிவந்தது. ‘சிபிஐ டைரிக் குறிப்பு’ என்னும் தலைப்பில் வெளிவந்த இந்தப் படத்தை கே.மது இயக்கியிருந்தார். பிரபல மலையாளத் திரைக்கதை ஆசிரியர் எஸ்.என்.சுவாமி கதை, திரைக்கதை எழுதியிருந்தார். அந்தக் காலத்தில் கேரளத்தில் பிரபலமாக இருந்த சிபிஐ வழக்கு விசாரணைகளை மையப்படுத்தி இதன் கதையை சுவாமி அமைத்திருந்தார். இதில் முகேஷ், ஜெகதி ஸ்ரீகுமார், ஊர்வசி, லிஸ்சி, சுகுமாரன், ஜனார்த்தனன் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். இவர்களில் முகேஷ், ஜெகதி ஸ்ரீகுமார் ஆகிய இருவரும் மம்மூட்டியுடன் இணைந்து தொடர்ந்து இந்தப் படங்களில் நடித்துள்ளனர்.

படம் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது மட்டுமின்றி இறந்தவர்களின் உடல் எடையைக் கொண்டு செய்த டெம்மியை வைத்து இதில் மம்மூட்டி செய்யும் விசாரணை முறை மிகவும் பிரபலமானது. அது இன்றளவும் பேசப்படும் விஷயமாக இருக்கிறது.

தமிழ்ப் பிராமணரான மம்மூட்டி சிபிஐ அதிகாரியாக வழக்குகளை விசாரிப்பதுதான் இந்தப் படத்தின் மையச் சரடு. ஜெகதி ஸ்ரீகுமாரும் முகேஷும் மம்மூட்டியுன் உதவி விசாரணை அதிகாரிகளாக இருப்பார்கள். ஒவ்வொரு படத்திலும் களங்கள் வெவ்வேறாக இருக்கும்.

இதன் இரண்டாம் பாகம் ‘ஜாக்ரதா’, 1989-ல் வெளியானது. ஒரு நடிகையின் மரணத்தை விசாரிக்கும் இந்தப் படத்தில் பிரதானப் பாத்திரத்தில் நடிகை பார்வதி ஜெயராம் நடித்திருந்தார். விசாரணை அதிகாரிகளாக மம்மூட்டி, முகேஷ், ஜெகதி ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2004-ல் ‘சேதுராம ஐயர் சிபிஐ’ என்ற பெயரில் இதன் மூன்றாம் பாகம் எடுக்கப்பட்டது. இதில் நவ்யா நாயர் சிபிஐ கூட்டணியுடன் நடித்திருந்தார். இதன் நான்காம் பாகமான ‘நேரறியான் சிபிஐ’ அடுத்த ஆண்டே வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் சம்ருதா சுனில், கோபிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த சிபிஐ படங்கள் அனைத்தும் கே. மதுவால் இயக்கப்பட்டவை. எழுத்து, எஸ்.என்.சுவாமி. மம்மூட்டி, கே. மது, எஸ்.என்.சுவாமி கூட்டணிக்குப் பெரும் எதிர்பார்ப்பு இப்போதும் கேரளத்தில் உண்டு. மேலும் பல ஆண்டுகள் உடல் நலப் பிரச்சினையால் நடிக்காமல் இருந்த கெஜதி ஸ்ரீகுமார் இந்தப் படத்தில் மீண்டும் நடித்துள்ளார் இதுவும் படத்துக்குக் கூடுதல் பலம். இந்தப் படத்தின் நான்காம் பாகம் வெளியாகி 17 வருடம் ஆகிவிட்டது. இந்த இடைவெளியில் மலையாள சினிமாவும் பார்வையாளர்களின் விருப்பமும் மாறியிருக்கின்றன. இதில் ‘சிபிஐ-5’ தாக்குப் பிடிக்குமா, என்பதைப் பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

SCROLL FOR NEXT