தெலுங்கு சினிமாவில் இருந்து மற்றுமொரு பான் இந்தியா திரைப்படம் உருவாகவுள்ளது.
சில வருடங்களுக்கு முன்பு வரை, அனைத்து திரையுலக நடிகர்களுமே தங்களுடைய திரையுலகம் சார்ந்த கதைக்களங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்கள். ஆனால், ‘பாகுபலி’, ‘கேஜிஎஃப்’, ‘புஷ்பா’ முதலான படங்களின் உலகளாவிய வரவேற்பு, அனைத்து நடிகர்களின் எண்ணவோட்டத்தையுமே மாற்றியது.
'பாகுபலி’ வரவேற்புக்குப் பிறகு, ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜுனியர் என்.டி.ஆர் நடிப்பில் ' ஆர் ஆர் ஆர்' படம் அதே பாணியில் பான் இந்தியா திரைப்படமாக வெளியானது. இந்தப் படத்தில் நடித்துள்ள நடிகர்கள் அனைவருமே அனைத்து மொழிகளின் விளம்பரப்படுத்துதல் நிகழ்விலும் கலந்துகொண்டு ஆச்சரியப்படுத்தினார்கள். அதிலும், ‘ஆர்.ஆர்.ஆர்’ என படத்தின் லோகோ கொண்ட உடையில் கலந்து கொண்டது நினைவுகூரத்தக்கது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘புஷ்பா’ படமும் அனைத்து மொழிகளிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் விளம்பரப்படுத்துதல் நிகழ்விலும் அனைத்து நடிகர்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்துக்குப் பிறகு சிரஞ்சீவி, ஜுனியர் என்.டி.ஆர், ராம்சரண், அல்லு அர்ஜுன் உள்ளிட்ட அனைத்து நடிகர்களின் படங்களும் இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இப்போது இவர்கள் வரிசையில் தெலுங்கின் மற்றொரு முன்னணி நடிகர் பான் இந்தியா படத்தில் நடிக்கவுள்ளார். மாஸ் மகாராஜா என தெலுங்கு சினிமா ரசிகர்களால் அழைக்கப்படகூடிய ரவி தேஜா தான் அந்த நடிகர். படத்துக்கு டைகர் நாகேஸ்வரராவ் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. 70 களில் அதிகம் விவாதிக்கப்பட்ட சர்ச்சைக்குள்ளான திருடனாக இருந்த நாகேஸ்வரராவ் சம்பந்தமான உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு படம் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு என பன் மொழிகளில் வெளியாகவுள்ளது. தெலுங்கு சினமாவின் முன்னணி இயக்குனரான வம்சி இயக்க உள்ளார். மேலும் தி காஷ்மீர் பைல்ஸ் படத் தயாரிப்பாளர் இந்தப் படத்தை தயாரிக்க தமிழ் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். நேற்று இதற்கான தொடக்க விழா நடந்தது.