இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கியுள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படம், பாகுபலி திரைப் படத்தின் சாதனையை முறியடித்து, முதல் நாள் மட்டும் ரூ.257 கோடி வசூல் செய்துள்ளது.
பிரபல இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட ஆர்ஆர்ஆர் திரைப்படம், கடந்த 25-ம் தேதி உலகெங்கும் உள்ள 11,000 திரையரங்குகளில் வெளியானது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நட்சத்திரங்களான ஜூனியர் என்.டி.ஆர். ராம்சரண் ஆகியோர் முதன்முறையாக இத்திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். மேலும் நடிகை ஆலியா பட், நடிகர் அஜய்தேவ்கன் ஆகியோர் முக்கிய கதாபாத் திரங்களில் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுகு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகி உள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.257 கோடி வசூல் செய்துள்ளதாக இத்திரைப்பட தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தெலங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் ரூ.120 கோடியும், கர்நாடகாவில் ரூ.16 கோடியும், தமிழகத்தில் ரூ.12 கோடியும், கேரளாவில் ரூ.4 கோடியும், வட இந்தியாவில் ரூ.25 கோடியும், வெளிநாடுகளில் ரூ.78 கோடியும் வசூலாகி உள்ளது.
இதற்கு முன்பு, ராஜமவுலி இயக்கிய பாகுபலி-2 திரைப்படம் முதல் நாளில் ரூ.217 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. தன்னுடைய இந்த சாதனையை ராஜமவுலி இப்போது தானே முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.