KPAC லலிதா ஒரு மேடையில், 'ஏழாம் வகுப்போடு படிப்பை நிறுத்தியதால்தான் நடிகரானேன்" என்று நகைச்சுவையாகப் பேசுவார். அது என்னவோ உண்மைதான். ஆனால், படிப்பறிவு இல்லாத அதே லலிதா தான் மலையாள சினிமாவில் பலருக்கு நடிப்பு பல்கலைக்கழகமாகத் திகழ்ந்தார். தமிழ் சினிமாவுக்கு ஒரு மனோரமா ஆச்சி என்றால் மலையாள சினிமாவுக்கு இந்த லலிதா சேச்சி. 550-க்கும் அதிகமான படங்கள், நாயகி தொடங்கி நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லி கதாபாத்திரம் என கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்களாக மலையாள சினிமாவில் தனி முத்திரை பதித்தவர் KPAC லலிதா.
இவரின் திரைப்பயணத்துக்கு அடித்தளமிட்டது நாடகக் குழு ஒன்றே. லலிதாவின் தந்தை ஆனந்தன் நாயர் ஒரு புகைப்படக் கலைஞர். அன்றைய காலத்தில் பெருன்னா பகுதியில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் ஆனந்தனுக்கு புகைப்பட கலைஞராக பணி. அந்த ஸ்டுடியோ இருந்த கட்டிடத்தில் முதல் தளத்தில் சங்கனாச்சேரி கீதா என்பவரின் நாடகக் குழு செயல்பட்டு வந்துள்ளது. தந்தைக்கு தினமும் மதிய உணவு கொடுக்க செல்லும் லலிதா, நாடகக் கலைஞர்களுடன் சேர்ந்து அவ்வப்போது சில காட்சிகளை ஒத்திகைப் பார்ப்பது வழக்கம். இந்த ஆர்வத்தை புரிந்துகொண்ட நாடகக் குழு உரிமையாளர், ஒருநாள் ஆனந்தனிடம் லலிதாவை நாடகத்தில் நடிக்கவைக்க சம்மதம் கேட்க, அதற்கு மறுப்பே விடையாக கிடைத்துள்ளது.
ஆனந்தன் மறுப்பு சொன்னாலும், லலிதா தனது விடாப்பிடியால் சம்மதம் வாங்கினார். அவர் ஒப்புதல் வாங்கியது நடிப்பதற்காக அல்ல, நடனம் பயில்வதற்கு. ஆம், ஆனந்தன் மகளுக்கு நடன கலையை கற்றுக்கொள்ளவே அனுமதிக்கொடுத்துள்ளார். இதனால், ஆரம்பத்தில் 'பாலி' என்று அழைக்கப்பட்ட நடனத்துடன் கூடிய நாடகங்களில் மட்டுமே பங்கேற்று வந்த லலிதாவுக்கு காலம் அதே தந்தையின் வாயிலாக மற்ற நாடகங்களில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றுக்கொடுத்தது. ஆனந்தன் தனது பணிக்கு இடையில் நோய்வாய்பட, மருத்துவர்கள் அவரை இனி எந்த வேலையையும் செய்யக்கூடாது என்று தெரிவித்துவிட்டனர்.
வருமானத்தின் ஒரே ஆதாரமாக இருந்த ஆனந்தனும் படுத்தப் படுக்கையாக நிதி ரீதியாக பல சிக்கல்களை சந்தித்தது அவர்களது குடும்பம். இப்போது வேறுவழியே இல்லாமல் முழுநேர நாடக நடிகராக லலிதா மாறும் நிலை. இதனால்தான் தனது படிப்பை துறந்து நாடகம் மூலமாக வாழ்க்கையை நகர்த்தினார் லலிதா. இந்த நாடகங்கள்தான் அவரை சினிமா வரை கொண்டுசென்றது. 1970-ஆம் ஆண்டு கே.எஸ்.சேதுமாதவன் இயக்கிய 'கூட்டுக்குடும்பம்' திரைப்படம் மலையாள சினிமாவில் லலிதாவுக்கு முதலில் அறிமுகம். அதுவரை சினிமா கேமராவை பார்த்திராதா லலிதாவை வைத்து அந்தப் படத்தின் முதல் ஷாட் எடுக்கப்பட்டது. அந்த ராசியால் பல குடும்பங்கள் கூட்டம் கூட்டமாக வந்து காண 'கூட்டுக்குடும்பம்' மெகா ஹிட்.
முதல் அறிமுகம் கொடுத்த ஹிட், விரைவாகவே அவரை மலையாள சினிமாவின் ஓர் அங்கமாகவும், பார்வையாளர்கள் மதிக்கும் முகமாகவும் மாற்றியது. சத்யன், பிரேம் நசீர் மற்றும் மது தொடங்கி மம்மூட்டி, மோகன்லால், சுரேஷ் கோபி, இன்றைய துல்கர் சல்மான் என கிட்டத்தட்ட மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார்கள் உடன் திரையை பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு லலிதா உயர்ந்ததன் பின்னணியில் அவரின் நடிப்பு மட்டுமே பிரதான காரணம். கதாபாத்திரங்களில் தனது இயல்பான நடிப்பால் மனித உணர்வுகளை எளிதாக கடத்தும் வித்தை அவருக்கு மட்டுமே தெரியும். இதனால்தான் மலையாளத்தின் முன்னணி இயக்குநர்கள் பலரும் தங்களின் ஒவ்வொரு படங்களிலும் சிறிய அல்லது பெரிய ரோல் என எதுவாக இருந்தாலும் லலிதாவின் இருப்பை உறுதி செய்தனர்.
அடூர் கோபாலகிருஷ்ணன் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர். இவரின் மதிலுகள் திரைப்படம் இரண்டு சிறை கைதிகளின் சோகமான காதல் கதையை எடுத்துசொல்லும். இதில் பஷீர் என்ற ஆண் கைதியாக மம்மூட்டி சிறைச் சுவரின் மறுபுறத்தில் உள்ள பெண் கைதியான நாராயணி மீது காதல் வயப்படுவார். இந்தப் படம் முழுக்க பெண் கைதியின் முகம் காண்பிக்கப்படவே மாட்டாது. மாறாக குரல் மட்டுமே கேட்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட நாராயணி பாத்திரத்துக்கு ஒருமுறை கூட திரையில் தோன்றாமலேயே தன் குரல் மூலம் தோழமை, காதல் என உணர்ச்சிகளையும் மனநிலைகளையும் வெளிப்படுத்தியிருப்பார் லலிதா. லலிதாவைத் தவிர வேறு எந்த நடிகரும் இப்படிப்பட்ட கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுப்பார் என்று கற்பனை செய்துபார்ப்பது கடினம். அந்த அளவுக்கு அர்ப்பணிப்பாக குரல் மூலம் சேர்த்திருப்பார் லலிதா.
இந்த அர்ப்பணிப்பே தனது கணவர் பரதனின் 'அமரம்' மற்றும் ஜெயராஜின் சாந்தம் படத்திற்காக இரண்டு தேசிய விருதுகளை பெற்றுக்கொடுத்தது. மலையாள சினிமாவில் இயக்குநர்களின் நடிகை எனப் பெயர்பெற்றவர் லலிதா மட்டுமே. அதனால் தான் பழம்பெரும் இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவனின் 'கூட்டுக்குடும்பம்' தொடங்கி நியூஜென் இயக்குநர் அமல்நீரத்தின் 'பீஷ்மபர்வம்' வரை 550 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
காம்ரேட் லலிதா!
மலையாள சினிமாவில் லலிதாவை குணசித்திர வேடங்களில் பார்த்த பலருக்கும் அவர் கம்யூனிஸவாதி என்பது தெரியாது. சங்கனாச்சேரி கீதா ஆர்ட்ஸ் கிளப்பில் ஒரு கலைஞராக லலிதா தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கியிருந்தாலும் அவரை செம்மைப்படுத்தியது KPAC (கேரளா மக்கள் கலைக் கழகம்) நாடகக் குழுவே. கம்யூனிச சித்தாந்தத்தை கேரளத்தில் விதைத்ததில் முக்கிய பங்கு இந்த KPAC நாடக குழுவுக்கு உண்டு. முழுக்க இடதுசாரி நாடகக் குழுவாகவே இது இயங்கியது. இந்த நாடக குழுவின், 'நீங்கள் என்னை கம்யூனிஸ்டாக்கி', 'மூலதனம்' உள்ளிட்ட புகழ்பெற்ற நாடகங்களில் லலிதா ஒரு பகுதியாகவே இருந்தார். சொல்லப்போனால் மகேஸ்வரி அம்மாவாக இருந்தவரை KPAC குழுவின் தலைவர் தோப்பில் பாசில்தான் லலிதாவாக பெயர் சூட்டினார். KPAC குழுவே லலிதாவின் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இதில் சேர்ந்த பின்பே திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு அமைந்தது.
நாடகங்களில் மட்டுமில்லாமல் நேரடியாகவும் கம்யூனிச சித்தாந்தங்களை மக்கள் மத்தியில் பரப்பிய பெருமையும் லலிதாவுக்கு உண்டு. சிபிஎம் கட்சியின் நட்சத்திர பேச்சாளராக பலமுறை தேர்தலில் பணியாற்றியுள்ளார். இவரின் கொள்கை பிடிப்பை உணர்ந்து கேரளாவின் முதல் முதலமைச்சரான இஎம்எஸ் லலிதாவை எப்போதும் காம்ரேட் என்றே அழைத்துள்ளார். கடந்த 2016-ல் கம்யூனிஸ்ட் வேட்பாளராக முதலில் அறிவிக்கப்பட்டார். ஆனால், தேர்தலில் போட்டியிட லலிதா விருப்பமில்லை என்று அறிவிக்க, அதனை வாபஸ் பெற்றது சிபிஎம்.
தனது நீண்ட சினிமா கரியரில் அனைத்து வகை வேடங்களிலும் நடித்து, மலையாளி சினிமா விரும்பிகளின் ஒவ்வோர் இதயத்திலும் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்த லலிதா மறைவு ஈடுசெய்ய முடியாதது.