'தி கிரேட் இந்தியன் கிச்சன்' பட இயக்குநர் ஜியோ பேபி நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். ஆந்தாலஜி படமான 'சுதந்திர சமரம்' படத்தில் அவரும் நடித்துள்ளார். இதில் ஒருபகுதியை அவர் இயக்கவும் செய்துள்ளார்.
ஜியோ பேபி இயக்கத்தில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் நடித்திருந்த படம் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'. புதிதாகத் திருமணமான பெண் ஒருவர், பழமைவாதக் கொள்கைகளும் ஆணாதிக்கமும் நிறைந்த கணவரின் குடும்பத்தில் படும் கஷ்டங்கள், தொடர்ந்து அவர் எடுக்கும் முடிவு என்ன என்பதைச் சொல்லியிருந்த படம் இது. இந்தத் திரைப்படம் விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆணாதிக்கச் சிந்தனையால் பாதிக்கப்படும் ஒரு படித்த பெண்ணின் நிலையை அழுத்தமாக, யதார்த்தமாகக் காட்டியிருந்ததாகப் பாராட்டுகளைப் பெற்றது.
இதனிடையே, 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' இயக்குநர் ஜியோ பேபி உள்ளிட்ட அதே படக்குழு எடுத்திருக்கும் அடுத்த படம், 'சுதந்திர சமரம்' (சுதந்திரப் போராட்டம்) எனப் பெயர் கொண்ட அது ஆந்தாலஜி படமாக சோனிலிவ் தளத்தில் வெளியாகியுள்ளது. நேற்றுமுன்தினம் வெளியான அந்தப் படத்தில் முதியோர்களின் அவலநிலையை எடுத்துச் சொல்லும் வகையில் 'முதியோர் இல்லம்' என்கிற தொகுப்பை இயக்கியுள்ளார் இயக்குநர் ஜியோ பேபி. அவரின் தந்தையை மனதில் வைத்து இந்தப் பகுதியை எழுதி, இயக்கியிருக்கும் ஜியோ பேபி, இந்தப் பகுதி 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' போல சமூகத்தில் முதியோர்களின் அவலநிலை குறித்த விவாதத்துக்கு வித்திடும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகர் ஜோஜு ஜார்ஜ், முதியவராகவும், அவருக்கு துணையாக நடிகை ரோகிணியும் இந்தப் பகுதியில் நடித்துள்ளனர். அதேநேரம், 'Ration' என்ற தொகுப்பின் மூலமாக ஜியோ பேபி நடிகராகவும் அறிமுகமாகி இருக்கிறார். இது ஒரு நிஜ வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாம். நடிப்பு தொடர்பாக பேசிய ஜியோ பேபி, "நான் நடிப்பை ரசிக்கிறேன், குறிப்பாக இதில் எனக்கு கிடைத்துள்ள கதாபாத்திரங்கள் போல் கிடைத்தால் நடிப்பை மிகவும் விரும்புவேன்" என்று தெரிவித்துள்ளார்.