தென்னிந்திய சினிமா

நீங்கள்தான் எனக்கு எல்லாம்: அண்ணன் மறைவு குறித்து மகேஷ் பாபு உருக்கம்

செய்திப்பிரிவு

தனது அண்ணனின் மறைவு குறித்து நடிகர் மகேஷ் பாபு உருக்கமான பதிவைப் பகிர்ந்துள்ளார்.

தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் மகேஷ் பாபு. இவரது அண்ணன் ரமேஷ் பாபு. இவர் 1974ஆம் ஆண்டு வெளியான ‘சீதாராமா ராஜு’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அப்படத்தைத் தொடர்ந்து 15 படங்களில் நடித்துள்ளார். 1997ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த ரமேஷ் பாபு தனது தம்பி மகேஷ் பாபு நடித்த ‘அர்ஜுன்’, ‘அதிதி’ ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார்.

நீண்ட காலமாக கல்லீரல் தொடர்பான பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த ரமேஷ் பாபு நேற்று முன்தினம் (ஜன 8) இரவு காலமானார். அவருக்கு வயது 53. திரையுலகைச் சேர்ந்த பலரும் ரமேஷ் பாபுவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் நடிகர் மகேஷ் பாபு தனது அண்ணனின் மறைவு குறித்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் உருக்கமான பதிவொன்றைப் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது:

''நீங்கள்தான் எனக்கு உத்வேகமாக இருந்தீர்கள், என்னுடைய பலமாக இருந்தீர்கள், என்னுடைய தைரியமாக இருந்தீர்கள். எனக்கு எல்லாமுமாக இருந்தீர்கள். நீங்கள் இல்லையென்றால், நான் இன்று இருப்பதில் பாதியாகக் கூட இருந்திருக்க மாட்டேன். எனக்காக நீங்கள் செய்த அனைத்திற்கும் நன்றி. இப்போது ஓய்வெடுங்கள். இந்த வாழ்க்கை தவிர்த்து, எனக்கு இன்னொரு வாழ்க்கை இருந்தால், அதிலும் நீங்கள்தான் என் ‘அண்ணய்யா’ ''.

இவ்வாறு மகேஷ் பாபு தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT