என்னுடைய குடும்ப உறுப்பினர்களைச் சங்கடத்துக்குள்ளாக்கும் பாத்திரங்களை நான் ஏற்க மாட்டேன் என நாக சைதன்யா கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நாக சைதன்யா - சமந்தா இருவருமே தங்களுடைய திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்தனர். இது திரையுலக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருவருக்கிடையே பல்வேறு திரையுலக பிரபலங்கள் பேசிய சமரசம் அனைத்துமே தோல்வியில் முடிந்தது. இந்த விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பெரிதும் விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் நாக சைதன்யா தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “நான் அனைத்துவிதமான கதாபாத்திரங்களுக்கும் தயாராகவே இருக்கிறேன். எனினும், அந்தக் கதாபாத்திரங்கள் என்னுடைய குடும்பத்துக்கோ, எங்களுடைய நற்பெயருக்கோ பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது. என்னுடைய குடும்ப உறுப்பினர்களைச் சங்கடத்துக்குள்ளாக்கும் பாத்திரங்களை நான் ஏற்க மாட்டேன்” என்று கூறியிருந்தார்.
நாக சைதன்யா இந்தப் பேட்டியில் மறைமுகமாக சமந்தாவைத்தான் குறிப்பிடுகிறார் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவிடத் தொடங்கிவிட்டனர். காரணம் சமீபத்தில் ‘புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற ‘ஊ சொல்றியா’ பாடல் இணையத்தில் கடும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. இந்தப் பாடலுக்கு சமந்தா நடனமாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.