பிரபல மலையாள நடிகை கே.பி.ஏ.சி. லலிதா(74) கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மலையாளத்தில் குணச்சித்திர பாத்திரங்களில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துபவர் லலிதா. தமிழிலும் பரமசிவன், கிரீடம், அலைபாயுதே, மாமனிதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கேரள சங்கீத நாடக அகாடமியின் தலைவராகவும் லலிதா உள்ளார். இதுவரை 550-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள இவர், பிரபல மலையாள இயக்குநர் பரதனின் மனைவி ஆவார். 1991 மற்றும் 2001-ம் ஆண்டுகளுக்கான சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதையும் நான்கு முறை கேரள அரசின் விருதையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு திருச்சூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த சில தினங்களாக லலிதா சிகிச்சை பெற்றுவந்தார். அங்குஅவரது உடல்நிலை மோசமடைந்ததால் கொச்சியில் உள்ள தனியார் மருத்துமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து மலையாள நடிகர் சங்கத்தின் செயலாளர் இடைவேளை பாபு 'இந்து தமிழ்' நாளிதழிடம் கூறுகையில், “லலிதாவுக்கு கல்லீரல் பிரச்சினை இருந்து வந்தது. மேலும் கட்டுப்பாடற்ற நீரிழிவும் இருந்தது. அனுமதிக்கப்பட்டபோது இருந்ததைவிட இப்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” என்றார்.