நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு இயக்குநர் ஷங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்
கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் புனித் ராஜ்குமார். நேற்று காலை பெங்களூரு சதாசிவநகரில் உள்ள தனது வீட்டின் உடற்பயிற்சி கூடத்தில் புனித் உடற்பயிற்சி மேற்கொண்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கியதாக தெரிகிறது.
இதையடுத்து அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிற்பகல் 3 மணியளவில் புனித் ராஜ்குமார் உயிரிழந்தார்.
தகவலறிந்து மருத்துவமனை முன்பு திரண்ட ரசிகர்கள், கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
புனித் ராஜ்குமாரின் மறைவு இந்திய திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுது. பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு இயக்குநர் ஷங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
கர்நாடகாவின் பவர்ஸ்டாரான புனித் ராஜ்குமாரின் மறைவு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னொரு நல்ல மனிதரை நாம் இழந்து விட்டோம். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு என்னுடைய ஆழந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.