என் ராஜினாமாவுக்குப் பின் ஆழ்ந்த அர்த்தம் இருக்கிறது என்று பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த தெலுங்குத் திரையுலக நடிகர்கள் சங்கமான மா அமைப்பின் தேர்தலில் விஷ்ணு மஞ்சு தலைமையிலான அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் பிரகாஷ்ராஜுக்கு எதிராக அவர் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் கிடையாது என்று பிரச்சாரம் செய்யப்பட்டது.
இதனால் தன்னை அந்நியனாகப் பார்க்கும் நடிகர்களிடையே தான் இருக்க விரும்பவில்லை என்று சங்கத்திலிருந்து ராஜினாமா செய்துவிட்டார் பிரகாஷ்ராஜ். இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பிலும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
தற்போது தனது அணிக்கு ஆதரவாக வாக்களித்த நடிகர்களுக்காக பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"என் பக்கம் நின்ற என் அன்பார்ந்த நடிகர் சங்க உறுப்பினர்களே. எனது ராஜினாமாவுக்குப் பின் ஆழ்ந்த அர்த்தம் இருக்கிறது. நீங்கள் காட்டிய அன்புக்கும் ஆதரவுக்கும் நாங்கள் பொறுப்பு என்பதை எங்கள் அணி உணர்ந்திருக்கிறோம். உங்களை நாங்கள் என்றும் கைவிடமாட்டோம். விரைவில் உங்களுக்கு விளக்கம் தருகிறோம். எங்களை நினைத்து நீங்கள் பெருமையடைவீர்கள்".
இவ்வாறு பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.