விஷ்ணுவின் தீவிர பக்தனான பிரகலாதனின் கதையுடன் உருவான அனிமேஷன் திரைப்படம் ‘மகாவதார் நரசிம்மா’. ஹோம்பாளே பிலிம்ஸ், கிளீம் புரொடக் ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த இப்படத்தை அஸ்வின் குமார் இயக்கினார்.
5 மொழிகளில் வெளியான இப்படம், தெலுங்கு, இந்தியில் வரவேற்பைப் பெற்றது. ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்து இப்படம் சாதனைப் படைத்ததை அடுத்து புராண, இதிகாசக் கதைகளைப் படமாக்குவதற்குப் பல நிறுவனங்கள் ஆர்வம் கொண்டுள்ளன. அதன்படி படங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஜியோ ஹாட்ஸ்டாரில் செயற்கை தொழில்நுட்பத்தால் உருவாக்கப் பட்டுள்ள ‘மகாபாரதம்’ தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதை கலெக்டிவ் ஆர்ட்டிஸ்ட்ஸ் நெட்வொர்க் சார்பாக அதன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி விஜய் சுப்பிரமணியம் தயாரித்துள்ளார்.
இவர் புராண, இதிகாச மற்றும் வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் 7 புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களை அறிவித்துள்ளார். மா காளி, ஹனுமான், சிவதுர்கா, கிருஷ்ணா, சுவாமி சமர்த் வாழ்க்கை கதை மற்றும் மராட்டிய மன்னர் சிவாஜி பற்றிய திரைப்படங்கள் உருவாக இருப்பதாக அறிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, “நமது நாட்டுப்புறக் கதைகள், சர்வதேச அளவில் மிகவும் சிறந்தவை என்று எப்போதும் நம்புகிறேன். கலாச்சாரத்தோடு பின்னிப் பிணைந்த இக் கதைகள் உலகளவில் கொண்டு செல்வதற்குத் தகுதியானவை. எங்கள் நிறுவனம் வளரும்போது, இன்னும் பல புராண, வரலாற்றுக் கதைகளை உருவாக்குவோம்” என்றார்.