தென்னிந்திய சினிமா

மலையாளத் திரையுலகில் மகிழ்ச்சியான திரைப்படங்கள் அருகிவிட்டன: பிருத்விராஜ்

ஐஏஎன்எஸ்

கடந்த ஒன்றரை வருடங்களாக அனைவரும் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் வாழ்ந்து வருவதன் எதிரொலியாக மலையாளத் திரையுலகில் மகிழ்ச்சியான திரைப்படங்கள் வருவதில்லை என்று நடிகரும், இயக்குநருமான பிருத்விராஜ் சுகுமாரன் தெரிவித்துள்ளார்.

நடிகராக அறிமுகமாகி ’லூசிஃபர்’ திரைப்படம் மூலம் இயக்குநராகவும் வெற்றி கண்ட பிருத்விராஜ், அடுத்ததாக மோகன்லால் நடிப்பில் ’ப்ரோ டாடி’ என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இது சமீபகாலமாக மலையாளத் திரையுலகில் இல்லாத, மகிழ்ச்சியான ஒரு திரைப்படமாக இருக்கும் என்று பிருத்விராஜ் கூறியுள்ளார்.

"அப்படியான படங்கள் வராததற்கு முக்கியக் காரணம், இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என நாங்கள் அனைவரும், கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு எப்படிப் படம் எடுக்கலாம், என்ன படம் எடுக்கலாம் என்று மட்டுமே யோசிக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளோம்.

எனவே பெரும்பாலான நேரங்களில் இப்படி யோசிக்கும்போது ஒன்று அது த்ரில்லர், அல்லது ’ஜோஜி’ போல தீவிரமான கதையாகத்தான் இருக்கும். மகிழ்ச்சியான படங்களில் நிறைய நடிகர்கள், சிரிப்பு, சந்தோஷம், நகைச்சுவை, இசை என்றெல்லாம் யோசிக்கும்போது, அய்யோ இது பெரிய படம், நிறைய இடங்களில், நிறைய மனிதர்களை வைத்து எடுக்க வேண்டும் என்று யோசிப்போம். எனவே அதை ஒதுக்கிவைத்துவிடுவோம்.

எனது இயக்கத்தில் இரண்டாவது படத்தை நீண்ட நாட்களுக்கு முன்பே வெளியிட்டிருக்க வேண்டும். அது ’லூசிஃபர் இரண்டாம் பாகம்’. அது பிரம்மாண்டமான படம். நாங்கள் நினைத்தது நடந்திருந்தால் இந்த வருடம் படப்பிடிப்பை முடித்திருப்போம். ஆனால், கரோனா நெருக்கடி காரணமாக ஆரம்பிக்க முடியவில்லை. என் பார்வையில், மலையாளத் திரையுலகில் கடந்த ஒன்றரை வருடங்களாக மகிழ்ச்சியான திரைப்படங்களைப் பார்க்க முடிவதில்லை என்று தோன்றுகிறது. நாம் பார்க்கும் மலையாளப் படங்கள் எல்லாம் இறுக்கமாக, மர்மக் கதையாக, கொலைகாரனைக் கண்டுபிடிப்பவையாக இருக்கின்றன.

இந்த நேரத்தில்தான் இரண்டு கதாசிரியர்கள் என்னைச் சந்தித்து ஒரு கதையைச் சொன்னார்கள். எனக்கு அது சுவாரசியமாகவும், நகைச்சுவையாகவும், முக்கியமாக லேசான மனதோடு ரசிக்க முடியும் கதையாகவும் தெரிந்தது. நான் அதை யதேச்சையாக மோகன்லாலிடம் வீடியோ காலில் விவரித்தேன். அவர் நடிக்கிறேன் என்று சொன்னார். படம் ஆரம்பமானது" என்று பிருத்விராஜ் பேசியுள்ளார்.

SCROLL FOR NEXT