சேலம் மாவட்டம், சாமி நாயக்கன் பட்டியைச் சேர்ந்த பி.பன்னீர் செல்வி என்ற சமூக ஆர்வலர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: வீரப்பன் கொல்லப்பட்டது பற்றிய உண்மைச் சம்பவம் என்று சொல்லி ‘கில்லிங் வீரப்பன்’ என்ற பெயரில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இப்படத்துக்கான டீசர் மற்றும் டிரைலரைப் பார்க்கும்போது, குரும்பா என்ற பழங்குடியினப் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கர்நாடக சிறப்பு அதிரடிப் படை போலீஸார்தான் முக்கியப் பங் காற்றியது போலவும் காட்சிகள் சித்திரிக்கப்பட்டுள்ளன.
வீரப்பன் 184 பொதுமக்கள், 97 போலீஸார், 900 யானைகளை கொன்றதாகவும், அவனைப் பிடிக்க ரூ.734 கோடி செலவிடப் பட்டதாகவும் இத்திரைப்படத்தில் கூறப்பட்டுள்ளது. பல்வேறு கொலைச் சம்ப வங்கள் மற்றும் வன்முறைக் காட்சிகளில் தற் போது உயிருடன் இருக்கும் சில நபர்களைப் போன்ற கதா பாத்திரங்களும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. வீரப்பன் மனைவியும் கொலை செய்ததாக காட்டப்பட்டுள்ளது. உண்மையில் அதுபோல எதுவும் நடக்கவில்லை. இதுபோன்ற காட்சிகள் உண் மைக்குப் புறம் பானவை.
வீரப்பன் விவகாரத்தில் தமிழ் நாடு காவல்துறை மற்றும் அரசியல் வாதிகளின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகை யில் எதிர்மறையான கருத்து கள் இடம்பெற்றுள்ள இத்திரைப் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதி கல்யாணசுந்தரம் முன்பு இம்மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இப்படம் தொடர்பாக தமிழக உள்துறை செய லரிடம் விளக்கம் கேட்டு தெரி விப்பதாக அரசு வழக்கறிஞர் கூறினார்.
அதைத் தொடர்ந்து மனுதாரரின் வழக்கறிஞர் வாதிடுகையில், “வரும் 1-ம் தேதி இத்திரைப்படம் வெளியிடப்பட இருப்பதால், அதுவரை தற்போதுள்ள நிலையே தொடர உத்தரவிட வேண்டும்” என்று கோரினார். இப்படம் குறித்து அரசின் கருத்தை அறியாமல், படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்ட நீதிபதி, இவ்வழக்கு விசாரணையை வரும் 4-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.