தென்னிந்திய சினிமா

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஜூனியர் என்.டி.ஆர் படத்தை உறுதி செய்த 'கே.ஜி.எஃப்’ இயக்குநர்

செய்திப்பிரிவு

ஜூனியர் என்.டி.ஆரின் 31வது திரைப்படத்தை ’கே.ஜி.எஃப்’ புகழ் பிரஷாந்த் இயக்குகிறார். ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து இந்தச் செய்தியை நீல் உறுதி செய்திருக்கிறார்.

ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் ராம் சரணுடன் நடித்து வருகிறார் ஜூனியர் என்.டி.ஆர். பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா நெருக்கடியால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்துக்குப் பிறகு ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்துப் பல்வேறு தகவல்கள் வெளியாகின. இறுதியாக, கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளதை ஜூனியர் என்.டி.ஆர் உறுதி செய்தார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுவிட்டது.

இந்நிலையில் இந்தப் படத்துக்குப் பிறகு 'கே.ஜி.எஃப்’ இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக பேட்டி ஒன்றில் என்.டி.ஆர் கூறியிருந்தார். தற்போது அதை உறுதி செய்யும் விதமாக, பிரஷாந்த் நீல் ட்வீட் செய்துள்ளார்.

ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்த்நாளை முன்னிட்டு ட்விட்டரில் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் பிரஷாந்த் நீல், அவரோட எடுத்துக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

இதோடு சேர்த்து, "நாம் நினைவில் கொள்ளத் தகுதியான ஒரு மண் இருந்தால் அது ரத்தம் தோய்ந்த மண் தான். வலிமை மிக்க ஒரே நபரான ஜூனியர்ன் என்.டி.ஆரின் 31-வது படத்தை இயக்கக் காத்திருக்கிறேன். பாதுகாப்பான பிறந்தநாள் அமைய வேண்டும் என்று உங்களை வாழ்த்துகிறேன் சகோதரா. மைத்ரீ மூவி மேக்கர்ஸுடன் வெற்றிகரமான கூட்டணியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்" என்று ட்வீட் செய்துள்ளார்.

’கே.ஜி.எஃப்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் வெளியீட்டுக்காகக் காத்திருக்கும் நீல் ஏற்கெனவே பிரபாஸ் இயக்கத்தில் ’சலார்’ என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

SCROLL FOR NEXT