மே 09 அன்று வெளியாகவிருந்த 'லைகர்' திரைப்படத்தின் டீஸர் வேறொரு சரியான தேதியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லைகர்’. இப்படத்தை பூரி ஜெகந்நாத் இயக்கி வருகிறார். இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை இயக்குநர் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது.
மே 9 விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் படத்தின் டீஸர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போதைய கரோனா இரண்டாவது அலை பாதிப்பை மனதில் வைத்து இன்னொரு தேதிக்கு இந்த டீஸர் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
"இந்த சோதனையான காலத்தில் நீங்கள் அனைவரும் வீட்டுக்குள் இருந்து, உங்களையும் உங்கள் சொந்தங்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்.
9 மே அன்று லைகர் திரைப்படத்தின் விறுவிறுப்பான டீஸரை வெளியிட நாங்கள் முழுவதும் தயாராக இருந்தோம். ஆனால் தற்போதைய சூழல், நம் தேசத்தின் நிலையை மனதில் வைத்து அந்த வெளியீடை வேறொரு நல்ல சமயத்தில் செய்யலாம் என்று முடிவெடுத்துள்ளோம்.
டீஸரைப் பார்க்கும் போது கண்டிப்பாக இதுவரை நீங்கள் பார்க்காத ஒரு விஜய் தேவரகொண்டாவை இந்தப் படத்தில் பார்க்கலாம். கண்டிப்பாக உங்களுக்கு ஏமாற்றமாக இருக்காது" என்று கூறி, அனைவரும் கரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ளத் தேவையான வழிமுறைகளையும், விரைவில் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்றும் தயாரிப்பு தளப்பு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.