மலையாள நடிகர் டொவினோ தாமஸுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தனது சமூக ஊடகப் பக்கங்களில் தாமஸ் தெரிவித்துள்ளார்.
‘மாயநதி’, ‘ஃபாரன்ஸீக்’, ‘தீவண்டி’, ‘வைரஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் டொவினோ தாமஸ். நிவின் பாலி, துல்கர் சல்மான் வரிசையில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றவர். ‘மாரி 2’ படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடித்துள்ளார்.
தற்போது 'நாரதன்', 'மின்னல் முரளி', 'கண்ணே கண்ணே' ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை தீவிரமாகி வரும் வேளையில் தொற்று எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மற்ற துறைகளைப் போல திரைத்துறையில் இருப்பவர்கள் பலரும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தனக்குத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதைப் பற்றிப் பகிர்ந்திருக்கும் டொவினோ தாமஸ், "வணக்கம், எனக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. நான் தற்போது தனிமையில் இருக்கிறேன். எனக்கு எந்த அறிகுறியும் இல்லை. நலமாக இருக்கிறேன். எனவே, இன்னும் சில நாட்களுக்குத் தனிமைதான். காத்திருக்கிறேன். மீண்டும் நடித்து உங்களுக்குப் பொழுதுபோக்கைத் தர ஆர்வத்துடன் இருக்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். விரைவில் மீண்டு வருவேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.