'உப்பெனா' படத்தின் விழாவில் விஜய் சேதுபதியை மிகவும் புகழ்ந்து பேசினார் நடிகர் சிரஞ்சீவி
சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்த 'சைரா' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார் விஜய் சேதுபதி. அதற்குப் பிறகு பல்வேறு வாய்ப்புகள் வந்தாலும் தவிர்த்து வந்தார். இறுதியாக, புச்சிபாபு சனா இயக்கத்தில் உருவாகியுள்ள 'உப்பெனா' படத்தில் வில்லனாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி.
வைஷ்ணவ் தேஜ், கீர்த்தி ஷெட்டி இருவரும் நாயகன், நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்தப் படம் பிப்ரவரி 12-ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக சிரஞ்சீவி கலந்துக் கொண்டார். இந்த விழாவில் அவர் பேசியதாவது:
"தயாரிப்பாளர்கள், கவலை கொள்ள வேண்டாம். நான் படத்தைப் பற்றி எதுவும் கசியவிட மாட்டேன். புச்சி பாபு, சுக்குவுடன் வந்து என்னிடம் கதை சொன்னபோது நான் வியந்துபோனேன். அவர் கதை சொன்னபோது எழுந்த உணர்வுகள் பரிசுத்தமானவை. எனக்கு எவ்விதத் தவறும் தெரியவில்லை.
படத்தின் மிகவும் முக்கியமான சிக்கலான புள்ளியை எப்படி அவ்வளவு எளிதாகச் சமரசம் செய்யும் அளவுக்கு விளக்க முடியும் என்று ஆச்சரியப்பட்டேன். அவரால், திரையிலும் அதை சமரசமாகச் சொல்ல முடியும். இந்தக் கதையைக் கேட்டவுடனேயே ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த விரும்பினேன். நான் மிகைப்படுத்தவில்லை.
இப்படம் நிச்சயமாகக் கண்களுக்கு விருந்தாக அமையும். மேலும், இப்படம் சிறப்பான திரைக்கதை அமைப்புக்குச் சரியான உதாரணம். புச்சி பாபுவின் பணி நேர்த்தி எனக்கு 70, 80 கால பாரதிராஜாவை நினைவுபடுத்துகிறது. அவர் கிராமத்துக்குக் கதைகளை அச்சு அசலாகக் கொடுத்தவராவார்.
விஜய் சேதுபதி, ஒரு மாமனிதர். அவரின் எளிமையும், அர்ப்பணிப்பும் அசாத்தியமானவை. அவர் இந்தியாவின் பன்முகத்தன்மை நடிகர். அவர், பிரதான வேடத்தில் தான் நடிப்பேன் என்று என்றைக்குமே பிடிவாதம் பிடித்ததில்லை. அவர் படத்துக்கு ஒப்புக்கொண்டதே படத்திற்குக் கிடைத்த முதல் வெற்றி. அவர், படத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் சென்றுவிட்டார். அண்மையில் 'மாஸ்டர்' படத்தைப் பார்த்தேன். விஜய் சேதுபதியின், பவானி கதாபாத்திரத்தை அவ்வளவு நேசிக்கிறேன்"
இவ்வாறு சிரஞ்சீவி பேசினார். மேலும், படக்குழுவினர் ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்தார்.
இந்த விழாவில் விஜய் சேதுபதி பேசும் போது, தனக்கு தெலுங்கு அவ்வளவாகத் தெரியாது என்று கூறி தெலுங்கு மற்றும் ஆங்கிலம் எனக் கலந்து பேசினார். சிரஞ்சீவி பேசிய வார்த்தைகளுக்கு நன்றி தெரிவித்த விஜய் சேதுபதி, தனக்கு ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி என்று கூறினார்.