நடிகை ஆன் அகஸ்டின் மற்றும் அவரது கணவர், ஒளிப்பதிவாளர் ஜோமோன் ஜான் விவாகரத்து செய்துகொள்ள இருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன.
2010ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமான அகஸ்டின் பிரபல மலையாளத் திரைப்பட நடிகர் அகஸ்டினின் மகள். ஆன், தனது முதல் படத்திலேயே சிறந்த புதுமுக நடிகைக்கான விருதுகளை வென்றார். 2013ஆம் ஆண்டு 'ஆர்டிஸ்ட்' திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை என்கிற கேரள மாநில விருதையும் வென்றவர். ஆனால் திருமணத்துக்குப் பின் வெறும் இரண்டு படங்களில் மட்டுமே நடித்தார்.
ஒளிப்பதிவாளர் ஜோமோன் ஜான் 'சப்பா குரீஷு' படத்தில் அறிமுகமாகி 'தட்டத்தின் மரியத்து', 'என்னு நிண்டே மொய்தீன்', 'சார்லி', 'தண்ணீர் மத்தன் தினங்கள்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் பணியாற்றியுள்ளார். 'கோல்மால் அகைன்', 'சிம்பா', 'சூர்யவன்ஷி' என பாலிவுட்டிலும் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக வலம் வருகிறார். தமிழில் 'எனை நோக்கிப் பாயும் தோட்டா' படத்தில் பணியாற்றியுள்ளார்.
நீண்ட நாட்கள் காதலித்து வந்த ஆன் அகஸ்டின் மற்றும் ஜான் ஜோடி 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டது. ஆனால், பல மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகத் தெரிகிறது. தற்போது ஜான் வெள்ளிக்கிழமை அன்று விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார். பிப்ரவரி 9ஆம் தேதி அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.