தென்னிந்திய சினிமா

மகளிர் காவல் அதிகாரிகள் தான் உண்மையான நட்சத்திரங்கள்: அனுஷ்கா ஷெட்டி

ஐஏஎன்எஸ்

மகளிர் காவல்துறை அதிகாரிகளின் முயற்சியால் தான் பெண்கள் பாதுகாப்பை உணர்கின்றனர். எனவே அவர்கள் தான் உண்மையான நட்சத்திரங்கள் என நடிகை அனுஷ்கா ஷெட்டி கூறியுள்ளார்.

சைபராபாத் காவல்துறை ஆணையர் தலைமையில் பெண் காவல்துறை அதிகாரிகளுக்கான முதல் மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகை அனுஷ்கா ஷெட்டி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். பெண் அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்களைப் பற்றிக் கலந்து பேச இந்த மாநாடை நடத்துவதாக சைபராபாத் காவல்துறை ஆணையர் விசி சஜ்ஜனார் கூறினார்.

நாள் முழுவதும் நடந்த இந்தக் கூட்டத்தில் 750க்கும் அதிகமான பெண் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஷீபாஹி (‘SHEpahi’) என்று பெயரிடப்பட்ட இந்த நிகழ்வில் ஷீ என்பது வலிமை, மனிதம் மற்றும் இரக்கத்தைக் குறிப்பதாகவும், பாஹி என்பது நல்ல செயலைக் குறிப்பதாகவும் இருக்கிறது.

இதில் பேசிய அனுஷ்கா, "திரைப்பட நடிகர்களான நாங்கள் நட்சத்திரங்களாகக் காட்டப்பட்டாலும் இந்த அறையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் தான் நட்சத்திரம். நாங்கள் திரை நட்சத்திரங்கள், நீங்கள் நிஜ நட்சத்திரங்கள். உங்கள் முயற்சி, கடின உழைப்பினால் தான் நாங்கள் பாதுகாப்பாக உணர்கிறோம். உங்கள் தியாகங்கள் உயர்வானவை" என்று குறிப்பிட்டார்.

மேலும் இந்த நிகழ்வில் அவசர எண் 100 வாகனங்கள் மற்றும் ஷீ பேருந்து வசதியும் துவக்கி வைக்கப்பட்டன.

SCROLL FOR NEXT