'அந்தாதூன்' மலையாள ரீமேக்கில் ப்ரித்விராஜுக்கு நாயகியாக ராஷி கண்ணா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அந்தாதூன்'. 2018-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் 3 தேசிய விருதுகளையும் தட்டிச் சென்றது.
இந்தப் படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தெலுங்கில் நிதின், தபு, நபா நடேஷ் உள்ளிட்டோர் நடிக்க மெர்லபாகா காந்தி இயக்கி வருகிறார்.
தமிழில் பிரசாந்த் நடிக்க ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கவுள்ளார். தபு கதாபாத்திரத்தில் சிம்ரன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், 'அந்தாதூன்' படத்தின் மலையாள ரீமேக் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முன்னணி ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்கவுள்ள இந்தப் படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் ப்ரித்விராஜ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் ராஷி கண்ணா நடிக்கவுள்ளார்.
இதர கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. அனைத்தும் முடிவானவுடன் அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள் எனத் தெரிகிறது.