’ஷாகுந்தலம்’ என்ற பெயரில் உருவாகும் புராணத் திரைப்படத்தில் நாயகியாக சமந்தா நடிக்கவுள்ளார். படத்தின் மோஷன் போஸ்டரைப் பகிர்ந்து இதை சமந்தா அறிவித்துள்ளார்.
கவிஞர் காளிதாசர் எழுதிய சமஸ்கிருத நாடகம் ’அபிஜன ஷகுந்தலம்’. இதில் ஷகுந்தலம் கதாபாத்திரத்தை வைத்து இயக்குநர் குணசேகர் புராணத் திரைப்படம் ஒன்றை இயக்குகிறார். குணா டீம் வொர்க்ஸ் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. சில மாதங்களுக்கு முன்பே படம் குறித்த அறிவிப்பு வெளியானாலும் யார் நடிக்கிறார்கள் என்பது பற்றிய விவரங்கள் இறுதியாகவில்லை. முன்னதாக இதில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கப்போவதாக செய்திகள் வந்தன. தற்போது சமந்தா நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
'இயற்கைக்குப் பிரியமான, மிக அழகான, மென்மையான ஷகுந்தலாவாக சமந்தா' என்று இந்த மோஷன் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக வெளியான மோஷன் போஸ்டரில், 'மறக்கப்பட்ட காதல். இன்னும் மீதமிருக்கும் மறக்க முடியாத ஒரு காதல் கதை' என்று வார்த்தைகள் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே இது துஷ்யந்த மகாராஜாவுக்கும், விஸ்வமித்ரர் - மேனகையின் மகளான ஷகுந்தலாவுக்கும் இடையே இருந்த காதலைச் சொல்லும் கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
'ஒக்கடு', 'அர்ஜுன்', 'சைனிகுடு', 'ருத்ரமா தேவி' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களின் இயக்குநர் குணசேகர் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய அளவில் அனைத்துத் தரப்பு ரசிகர்களுக்கும் சென்று சேரும் வகையில் இந்தப் படம் உருவாகிறது என தயாரிப்புத் தரப்பு அறிவித்துள்ளது.
சமந்தா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்