டிசம்பர் 21-ம் தேதி 'கே.ஜி.எஃப் 2' டீஸர் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
'கே.ஜி.எஃப் சேப்டர் 1' படத்தைத் தொடர்ந்து, 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறது. இதில் புதிதாக சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட சில கதாபாத்திரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் வெளியீடு என அனைத்துமே பாதிக்கப்பட்டன.
தற்போது, இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் யாஷ் - சஞ்சய் தத் மோதும் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியைப் படமாக்கி வருகிறார்கள். 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மட்டுமே வெளியாகியுள்ளது. டீஸர் எப்போது வெளியீடு என்ற எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது.
இந்நிலையில், 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' படக்குழுவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:
"ஒருவழியாக அந்த நாள் வந்துவிட்டது. 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' படத்தின் படப்பிடிப்பை முடிப்பதற்கு நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்று உங்கள் அனைவரிடமும் எங்களால் சொல்ல முடிகிற நாள்.
எங்கள் அற்புதமான ரசிகர்களுக்காக ஒரு சடங்கு போல டிசம்பர் 21 அன்று வழக்கமாக நாங்கள் பின்பற்றும் ஒரு விஷயம். இந்த வருடமும் அது நடக்கும். 21 டிசம்பர் காலை 10.08 மணிக்கு உங்கள் அனைவருக்கும் எங்கள் அணியிலிருந்து ஒரு விருந்து. எங்கள் அத்தனை அதிகாரபூர்வ பக்கங்களிலும்.
எப்போதும்போலப் பொறுமையாக இருந்ததற்கும் எங்களது இந்தப் பயணத்தில் எங்களுக்கு உறுதியான ஆதரவு தந்ததற்கும் நன்றி".
இவ்வாறு 'கே.ஜி.எஃப் 2' படக்குழுவினர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையில் என்ன வெளியிடப் போகிறோம் என்பதைப் படக்குழு தெரிவிக்கவில்லை. ஆனால், இணையத்தில் 'கே.ஜி.எஃப் 2' டீஸராகத்தான் இருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.