தென்னிந்திய சினிமா

யஷ் - சஞ்சய் தத் சண்டைக் காட்சிகள் படப்பிடிப்பு தொடக்கம்

செய்திப்பிரிவு

'கே.ஜி.எஃப் 2' படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிக்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான கன்னடப் படம் 'கே.ஜி.எஃப்'. பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் முதல் பாகத்துடன் முடிவடையவில்லை. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக 'கே.ஜி.எஃப் 2' தயாரிப்பில் உள்ளது.

பிரசாந்த் நீல் இயக்கி வரும் இந்தப் படத்தில் முதல் பாகத்தின் நடிகர்களுடன் சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு சஞ்சய் தத் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதற்கான சிகிச்சையில் இருந்ததால், எந்தவொரு படத்தின் படப்பிடிப்பிலும் சஞ்சய் தத் கலந்து கொள்ளவில்லை.

தற்போது புற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டுவிட்டார் சஞ்சய் தத். இதனால், அவர் நடித்து வரும் படத்தின் படக்குழுவினரும் உற்சாகத்துடன் பணிகளைத் தொடங்கியுள்ளனர். 'கே.ஜி.எஃப்' படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சிக்கான படப்பிடிப்பு இன்று (டிசம்பர் 7) முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இதனை இயக்குநர் பிரசாந்த் நீல் தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தச் சண்டைக்காட்சியை சண்டை இயக்குநர்கள் அன்பறிவ் வடிவமைக்கிறார்கள். படப்பிடிப்புத் தளத்தின் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, "இது க்ளைமாக்ஸ். ராக்கி vs ஆதிரா. சண்டை இயக்குநர்கள் அன்பறிவ் உடன்" என்று தெரிவித்துள்ளார் பிரசாந்த் நீல்.

இந்தச் சண்டைக் காட்சி படப்பிடிப்புடன், ஒட்டுமொத்த 'கே.ஜி.எஃப் 2' படப்பிடிப்பும் முடிவடையவுள்ளது. விரைவில் டீஸர் குறித்த அறிவிப்பை வெளியிட்டு விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கப் படக்குழு முடிவு செய்துள்ளது.

SCROLL FOR NEXT