மோகன்லால் நடித்து வரும் புதிய படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'த்ரிஷ்யம் 2'. ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டது படக்குழு. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
'த்ரிஷ்யம் 2' படத்தைத் தொடர்ந்து மீண்டும் உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் மோகன்லால். இதன் படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்து வருவது உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து ஷ்ரத்தா ஸ்ரீநாத் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
" 'ஆராட்டு' படப்பிடிப்பில் இன்று இணைந்தேன். ஒட்டுமொத்தக் குழுவையும் சந்தித்தேன். மோகன்லால் என்னிடம் சொன்ன முதல் வார்த்தைகளே, இந்தக் குடும்பத்துக்குள் வரவேற்கிறேன் என்பதே. எனது நாள் சிறப்பானதாகிவிட்டது"
இவ்வாறு ஷ்ரத்தா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
தமிழில் மாதவனுடன் 'மாறா' மற்றும் விஷாலுடன் 'சக்ரா' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இதனைத் தொடர்ந்து 'கலியுகம்' எனும் படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.